
அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணை 8 மணி நேரத்திற்குப் பின் நிறைவடைந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரது வீடுகளும் ரெய்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகின.
அப்போது ஆர்.கே.நகர். இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டது மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
இதற்கிடையே அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவும் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை நேற்று உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த விஜயபாஸ்கர் சம்மன் ஏதும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே இன்று காலை விசாரணைக்கு ஆஜரான ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 9 மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.