திமுகவை அழிக்க தேவையில்ல... தேர்தலுக்கு பிறகு தானாகவே அழிஞ்சிடும்... சி.வி.சண்முகம் சாபம்...!

By Asianet TamilFirst Published Dec 31, 2020, 10:23 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக தானாகவே அழிந்துவிடும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 

சிதம்பரத்தில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்,“வரும் சட்டப்பேரவைத் தேர்தல்  நமக்கு ஒரு சவாலானது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஜெயலலிதா இல்லாமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். எனவே, கட்டாயம் தொண்டர்கள் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடலூர்ஜெயலலிதாவின் கோட்டை. பெண்களால்தான் சமையல் அறை வரை கூடச் சென்று ஓட்டு கேட்க முடியும். அதனால் ஆண்களாகிய நீங்கள் களத்தில் இறங்கிக் கடுமையாக வேலை செய்ய வேண்டும். வாக்காளர்களைப் பார்த்துத் தொடர்ந்து வணக்கம் சொல்லுங்கள். இதனால் நமக்கு ஓட்டு விழும்.


அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். ஜெயலலிதா தன் கடைசிக் கூட்டத்தில் பேசுகையில் இந்தக் கட்சி 100 ஆண்டுகளைக் கடந்தும் இருக்கும். இதற்கு எல்லாரும் பாடுபட வேண்டும் என்று கூறிச் சென்றார். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தேர்தல் வரை நமக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். தேர்தலுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்தால் அதிமுகவில் பதவி கிடைக்கும்.


தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் செய்யாததைச் சொல்லி ஓட்டுக் கேட்பார்கள். ஆனால், நாம் செய்யக்கூடியதை மட்டுமே சொல்லி ஓட்டு கேட்போம். திமுகவினர் நம்மை திசை திருப்ப முயற்சிப்பார்கள். அதற்கு ஆட்படாமல் நமது வேலையை நாம் பார்க்க வேண்டும். திமுகவை நாம் அழிக்க வேண்டாம். இந்தத் தேர்தலுக்கு பிறகு அது தானாகவே அழிந்துவிடும்” ” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

click me!