ஜெய்ஹிந்த் வார்த்தை இல்ல.. தமிழகம் தலை நிமிர்ந்தது.. ஈஸ்வரனின் பேச்சுக்கு கொந்தளிக்கும் பாஜக..!

By Asianet TamilFirst Published Jun 25, 2021, 8:50 AM IST
Highlights

ஆளுநர் உரையைப் படித்தவுடன் தமிழகம் நிமிர்ந்துவிட்டது என்று சட்டப்பேரவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.
 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆ ளு நரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.  சட்டப்பேரவையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் பேசினார். “ஆளுநர் உரையைப் படித்தவுடன் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆளுநர் உரையைப் பார்த்தேன். கடைசியில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று போட்டிருந்தது. ஆனால், இந்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற அந்த வார்த்தை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்” என்று பேசினார்.
ஈஸ்வரனின் இந்தப் பேசிய வீடியோவை தற்போது பாஜகவினர் சமூக ஊடங்களில் பகிர்ந்துவருகிறார்கள். ஈஸ்வரனின் பேச்சு தொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் எந்த அளவுக்கு தாழ்ந்துள்ளது என்பது ‘நீங்கள் என் முதுகில் சொறிந்துவிடுங்கள். நான் உன்னுடையதை சொறிந்துவிடுகிறேன்’ என்பது போல உள்ளது. ஆளுநர் உரையாற்றியபின் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று சட்டமன்றத்தில் ஒரு அரசியல்வாதி மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று விமர்சனம் செய்துள்ளார். 
இதேபோல பாஜகவினர் பலரும், ஈஸ்வரன் பேசியது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

click me!