தங்கத்தமிழ்ச்செல்வனுக்காக தேனியை இரண்டாகப் பிரித்த திமுக... பின்னணியில் ஐ-பேக் டீம்..!

By Asianet TamilFirst Published Oct 2, 2020, 9:04 AM IST
Highlights

கம்பம் ராமகிருஷ்ணனை பதவியிலிருந்து நீக்கிவிட்டு தங்க தமிழ்ச்செல்வனை நியமித்தால், சீனியர்கள் புறக்கணிப்பு என்ற செய்தி விஸ்வரூபம் எடுக்கும் என்பதையும் திமுக தலைமை உணர்ந்திருந்தது. கு.க. செல்வம் விவகாரம் ஏற்கனவே உள்ள நிலையில், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டது.
 

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் பரிந்துரைப்படியே தங்க தமிழ்ச் செல்வனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சார்பில் அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. அதில், தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்படுவதாகவும், அவரும் ஆ.ராசாவும் வகித்து வந்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவிகள் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனிக்கும் சபாபதி மோகனுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பின் மூலம் தங்கதமிழ்ச்செல்வன் தேனி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்கு முன்புவரை தேனி மாவட்டச் செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருந்தார். மதிமுகவிலிருந்து மீண்டும் திமுகவுக்கு திரும்பிய கம்பம் ராமகிருஷ்ணனுக்கு திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு  நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவின் கோட்டையான ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்குப் பிறகு அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச்செல்வன். அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதற்கிடையே தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு தேனி மாவட்ட செயலாளர் பதவி வழங்கினால், தேர்தலுக்கு முன்பு திமுக பலமாகும் என்று பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திமுக தலைமையிடம் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி வரவுக்குப் பிறகு திமுக செயலாளராக நன்னியூர் ராஜேந்திரனுக்குப் பதில், செந்தில் பாலாஜி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல கம்பம் ராமகிருஷ்ணனை நீக்கிவிட்டு தங்க தமிழ்ச்செல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க திமுக மேலிடம் யோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


ஆனால், கம்பம் ராமகிருஷ்ணன் மிகவும் சீனியர். தேனியில் அவருக்கென தனி செல்வாக்கு உள்ளது. இடையே மதிமுகவுக்கு சென்றுவந்தாலும் மீண்டும் திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க முடிந்தது. மேலும் மறைந்த திமுக  தலைவர் மு. கருணாநிதிக்கு நெருக்கமானவர். அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தங்க தமிழ்ச்செல்வனை நியமித்தால், சீனியர்கள் புறக்கணிப்பு என்ற செய்தி விஸ்வரூபம் எடுக்கும் என்பதையும் திமுக தலைமை உணர்ந்திருந்தது. கு.க. செல்வம் விவகாரம் ஏற்கனவே உள்ள நிலையில், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டது.
இதனையடுத்து தேனியை இரண்டாகப் பிரிக்க முடிவானதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக மாவட்டங்களைப் பிரித்து புதிய பொறுப்பாளர்களை திமுக நியமித்துவருகிறது. அதை கையில் எடுத்த திமுக தலைமை, சிறிய மாவட்டமான தேனியை இரண்டாகப் பிரித்துள்ளது. அதன்படி போடி, பெரியகுளம் தொகுதிகள் அடங்கிய தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனையும், ஆண்டிப்பட்டி, கம்பம் தொகுதிகள் அடங்கிய தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணனையும் திமுக மேலிடம் நியமித்துள்ளது.


அதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்பட பல பதவிகளை வகித்துவந்த தங்கதமிழ்ச்செல்வன், திமுகவிலும் மாவட்டச் செயலாளராக உயர்ந்துள்ளார். ஆனால், மாவட்ட எல்லை மிகவும் சுருங்கிவிட்டது என்பதுதான் இதில் ஹைலைட்!

click me!