வேளாண் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் தெரியுமா..? லிஸ்ட் போட்டு விளாசிய மு.க. ஸ்டாலின்...!

By Asianet TamilFirst Published Oct 2, 2020, 8:20 AM IST
Highlights

கிராம சபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில், பல மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடப்பதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கை செழித்து குலுங்க போவதாகப் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றுகிறார்கள். இச்சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கை தரிசு நிலமாகப் போகப்போகிறது என்பதே உண்மை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட் களுக்கு குறைந்தபட்ச அடக்க விலையை இச்சட்டங்கள் சொல்ல இல்லை.
விவசாயி என்ன விளைய வைக்க வேண்டும்; அதை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும்; என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கிற உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க இச்சட்டங்கள் வழி வகுக்கின்றன. இந்திய உணவுக் கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் என எல்லாவற்றையும் மூடப்போகிறார்கள். உழவர் சந்தைகளை இனி திறக்க மாட்டார்கள்.
வேளாண்மை என்பது மாநில பட்டியலில்தான் இருக்கிறது. ஆனால், மாநில உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு இந்தச் சட்டம் வேட்டு வைக்கிறது. இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு உண்டா, கடன் தள்ளுபடி உண்டா, உணவு தானிய மானியம் உண்டா, உர மானியம் உண்டா, பொருட்களை பதப்படுத்தி வைக்க நிதி உண்டா, விவசாயத் தொழிலாளர்களின் வேலை உத்தரவாதம் உண்டா? எதுவுமே கிடையாது. அதனால்தான், இந்தச் சட்டங்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.


இச்சட்டங்கள் எல்லாமே அத்தியாவசிய உணவு பொருட்களின் பதுக்கலுக்கு வழிவகுக்கும். செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக வகை செய்யும். இன்று தமிழக கிராமங்கள் அனைத்திலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 சட்டங்களையும் எதிர்த்து, அனைத்து ஊராட்சி தலைவர்களும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து கிராம சபைகளிலும் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து பல மாவட்டங்களில் உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

click me!