அடங்காத தம்பி! அழாத குறையாக ஓ.பி.எஸ்...! துணைமுதல்வரை உலுக்கும் தேனி களேபரங்கள்

By vinoth kumarFirst Published Nov 4, 2018, 3:43 PM IST
Highlights

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை இப்போது தெறிக்க விடும் பகையாளி யார்? என்று கேட்டால்...தினகரனா? வெற்றிவேலா? ஸ்டாலினா? அட அவரது பங்காளி எடப்பாடியாரா? என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லவே இல்லை என்று  பன்னீரின் முகாமிலிருந்து பதில் வருகிறது. 

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை இப்போது தெறிக்க விடும் பகையாளி யார்? என்று கேட்டால்...தினகரனா? வெற்றிவேலா? ஸ்டாலினா? அட அவரது பங்காளி எடப்பாடியாரா? என்று கேட்டால் இல்லை! இல்லை! இல்லவே இல்லை என்று  பன்னீரின் முகாமிலிருந்து பதில் வருகிறது. அப்படியானால் யார்தான் அவருக்கான பிரச்னை? என்று கேட்டால் ஒட்டுமொத்த கரங்களும் சுட்டிக் காட்டுவது பன்னீரின் தம்பியான ஓ.ராஜாவை தான். அவரது செயல்பாடுகள் பன்னீர்செல்வத்துக்கு மிக பெரிய இடைஞ்சலை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள். 

கடந்த சில வருடங்களுக்கு முன் தேனி மாவட்டத்தை சேர்ந்த பூசாரி நாகமுத்து என்பவரின் தற்கொலை விவாகரத்தில் ஓ.ராஜாவின்  பெயரும் கமிட் ஆகி பன்னீரின் தலை உருட்டப்பட்டது. அந்த விவகாரத்தில் ஜெயலலிதா வைத்த விசாரணையில் விளக்கம் கொடுத்து மீள்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் பன்னீர். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் எவ்வளவு சிக்கலை சந்தித்து, பெரும் சர்ச்சை மற்றும் தூற்றுதலை வாங்கிக் கட்டிக் கொண்டு அவர் ஆட்சி மற்றும் கட்சியில் பெரிய பதவியில் இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. 

பன்னீரை விமர்சிக்கவும், அவரை மனரீதியாக காயப்படுத்தவும் எதிர் கட்சிகள் மட்டுமில்லை அவரது சொந்த கட்சியான அ.தி.மு.க.விலேயே பெரும் கோஷ்டிகள் முஸ்டி முறுக்கி செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தன் தம்பி ராஜா மீண்டும் மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கி, பிரச்னைகளை இழுப்பதால் பெரும் தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார் பன்னீர்செல்வம். தற்போது ராஜா மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகத்தான் தேனி முழுக்க பெரும் புகார் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. 

அதாவது...தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி பகுதிகளில் மணல், கரம்பை மண் உள்ளிட்ட கனிம வளங்களை ராஜாவின் தரப்பு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்! என்பதுதான் அந்த புகார். இந்த பிரச்னையை எடுத்து வைத்து போராட்டங்கள் நடத்தியதோடு, கலெக்டரிடம் புகார், பத்திரிக்கைகளுக்கு பேட்டி என்று கொடுத்துக் கொண்டிருந்த தென்னிந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் துரை என்பவர் சமீபத்தில் மிக கடுமையாக ஒரு கூலிப்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடி “என்னை தாக்கியது ஓ.ராஜாவின் ஆட்கள்தான். அவர் உத்தரவிட்டுதான் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.  

ஆனால் துணை முதல்வரின் தம்பி என்பதால் போலீஸ் புகாரை ஏற்க மறுக்கிறது. எனவே காவல்துறையின் தலைமையிடம் இதில் தலையிட்டு எனக்கான புகாரை ஏற்க செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டுக்கு சென்று வழக்கு பதிய வைத்து, ராஜாவை கைது செய்யும் வரை அடங்கமாட்டேன்.” என்று கர்ஜித்திருக்கிறார். ஆனால் ஓ.ராஜாவின் தரப்போ கனிமவள கொள்ளை புகாரையும், துரையை தாக்கிட ஆள் அனுப்பினார் எனும் புகாரையும் அடியோடு மறுக்கிறது. 

இருந்தாலும் கூட ‘தன் அண்ணன் துணை முதல்வராக இருக்கும் தைரியத்தில்தான் ஓ.ராஜா இப்படி கனிமங்களைக் கொள்ளையடிப்பது,  தட்டிக் கேட்பவர்களை கூலிப்படையை வைத்து தாக்குவது! என்று அத்துமீறிக் கொண்டிருக்கிறார். எனவே ஓ.பி.எஸ். பதவி விலக வேண்டும்.’ என்று போர்க்கொடி தூக்குகின்றனர். என்ன பண்ணப்போகிறார் பன்னீர்செல்வம்?

click me!