புதுச்சேரி வரலாற்றில் மிக மோசமான அத்தியாயம் முடிவுக்கு வந்தது.. புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 2:06 PM IST
Highlights

தற்போதைய சூழ்நிலையில்  நாங்கள் ஒரு ஆட்சி அமைக்க முயற்சிக்க மாட்டோம், எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் ஆதரவுடன் மோடி தலைமையில் என்.ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுடன் என்டிஏ கூட்டணி அமைத்து , தேர்தலில் வென்று ஆட்சியை அமைப்பதுடன், புதுச்சேரி மக்களுக்கு புதிய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என அவர் கூறியுள்ளார். 

புதுச்சேரி வரலாற்றில் மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றான நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- திமுக அரசு முடிவுக்கு வந்துள்ளது எனவும்,  நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்து, நாராயணசாமி ராஜினாமா செய்திருப்பதன் மூலம் புதுச்சேரியில் மோசமான மன்னராட்சி முடிவுற்றுள்ளது எனவும் புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

கடந்த 65 ஆண்டுகாலமாக காங்கிரஸ் அரசு புதுச்சேரியை ஆண்டது, மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களித்தனர். வளர்ச்சி மற்றும் வளத்திற்கு பதிலாக ஊழல், வாரிசு அரசியலையே காங்கிரஸ் கட்சி கொடுத்தது. மக்கள் கடுமையாக சுரண்டப்பட்டனர், சொல்லொணாத் துயரத்திற்கு  ஆளாகினர். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மாநில நிதி முற்றிலுமாக சூறையாடப்பட்டுள்ளது, அது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக வேலைவாய்ப்புகள், ரேஷன், சுகாதாரம், கல்வி, குழந்தைகள் நலன் உள்ளிட்டவற்றிற்காக மத்திய அரசு நிதி வழங்கியது, ஆனால் அது அனைத்தையும்  நாராயணசாமி தலைமையிலான அரசு கொள்ளை அடித்தது. 

அதற்கு சிறந்த  உதாரணம் நேற்று பெய்த ஒரே ஒரு மழையே போதும், அது காங்கிரஸ் அரசின் லட்சணம் என்ன என்பதை காட்டிவிட்டது, மக்கள் அதில் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகினர் என்பதே அதற்கு சாட்சி, ராகுல் காந்தி உடனான சந்திப்பின் போது  புயல் தங்களைப் தாக்கியபோது எவ்வளவு சிரமத்திற்கு ஆளானோம் என்பதை மக்கள் கூறியதை நாம் பார்த்தோம். வளர்ச்சிக்கு மாற்றாக ஊழல்  மற்றும் சுரண்டல் கலாச்சாரத்தையே காங்கிரஸ்-திமுக கூட்டணி மக்கள் மீது திணித்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு  சரியான பாடம் கற்பிப்பார்கள். 

தற்போதுள்ள நிலையில் புதுச்சேரிக்கு ஒரு புதிய சகாப்தம், புதிய அரசு, புதிய கலாச்சாரம், சிறந்த சேவை, புதிய பார்வை கொண்ட தலைமை தேவை. மீண்டும் இது போன்ற ஒரு அரசு அமைந்து விடவே கூடாது. மொத்த உலகிற்கும், இந்தியாவிற்கும், கடின உழைப்பு, மக்களுக்கு ஊழல் இல்லாத சேவை செய்வதில் அர்ப்பணிப்பு போன்றவற்றிற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் பிரதமர்  மோடியின்  பிப்ரவரி 25 ஆம் தேதி வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பிரதமர், புதுச்சேரிக்கு மீன்பிடி மையங்கள், ஜவுளி பூங்காக்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, உட்கட்டமைப்பு போன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார். 

தற்போதைய சூழ்நிலையில்  நாங்கள் ஒரு ஆட்சி அமைக்க முயற்சிக்க மாட்டோம், எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மோடி தலைமையில் என்.ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுடன் என்டிஏ கூட்டணி அமைத்து , தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து, புதுச்சேரி மக்களுக்கு புதிய, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என அவர் கூறியுள்ளார்.  

 

 

click me!