
தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான கட்டமைப்பு உள்ளது எனவும், ஜூலை மாதத்திற்கு மட்டும் சுமார் 71 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும், தமிழகத்திற்கு இதுவரை 1.46 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால் வழங்கபட்ட நிலையில் 1.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாத நிலையில் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சிறப்பு தொகுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜுன் மாதத்திற்கு 48 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கபட்ட நிலையில் நேற்று கூடுதலாக சிறப்பு தொகுப்பின் மூலம் 2.50 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி கிடங்கை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ஜூன் மாதத்திற்கு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியிருந்த 42 லட்சம் தடுப்பூசிகள் மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் தடுப்பூசி செலுத்தும் பணியை பாராட்டி கூடுதலாக 5 லட்சம் ஊசிகளை மத்திய அரசு வழங்கி அதுவும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மத்திய அரசு தொகுப்பிலிருந்து சிறப்பு ஒதுக்கீடாக பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி கிடங்கில் இருந்து 2.5 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ஜூன் மாதம் மட்டும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழக அரசு பெற்று மக்களுக்கு செலுத்தியுள்ளதாகவும், மேலும் ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் 2-ஆம் தேதி முதல் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.