முழுமையான சோதனைகளுக்குப் பிறகே தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.. மருத்துவர்கள் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2021, 12:28 PM IST
Highlights

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதன் திறன் குறித்த எந்த விதமான குறைந்த பட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையிலும் அதை பயன் பாட்டுக்கு கொண்டுவருவது சரியல்ல.

கொரோனா தடுப்பூசிகளின் சோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் முழுமையான சோதனைகளுக்குப் பிறகே பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம்: 

கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சி ,கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரியது. இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியில் உலக அளவில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கும்  மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளை போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்புக்குரியது. அனைவருக்கும் இத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது.
எனினும் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை  அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை ( Herd Immunity) தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனை பெற முடியும். இந்த கால வரம்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவேண்டும். 

தடுப்பூசிகள் கொரோனா தடுப்பில் மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும். இந்தியாவில் பயன் படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் ( Clinical Trials) முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும், உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல், அவற்றை பயன் பாட்டிற்கு கொண்டுவருவது அவ நம்பிக்கைகளையே உருவாக்கும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் நடத்தப்பட்ட ஊடகவியளாளர் சந்திப்பில், ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது, சந்தேகங்களுக்கு வழி வகுக்குகிறது.

அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், தடுப்பூசிகளின் சர்வதேச வர்த்தகத்தை கருத்தில் கொண்டும்,  தடுப்பூசிகளை அவசர கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டுவருகிறதோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த  ஜூலை மாதமே, இரண்டாம் கட்ட பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில் ,ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தன்று, தடுப்பூசி பயன் பாட்டுக்கு வரும் என அறிவித்தது. முழுமையான சோதனைகள் முடியாமல் இது போன்று அவசர கோலத்தில்  அறிவியலுக்கு புறம்பாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த அறிவிப்பை மத்திய அரசு கைவிட்டது. 

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதன் திறன் குறித்த எந்த விதமான குறைந்த பட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையிலும் அதை பயன் பாட்டுக்கு கொண்டுவருவது சரியல்ல. சோதனைகள் முழுமை பெற்று, முடிவுகளை வெளிப்படையாக அறிவித்த பிறகே அதை பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பயனாளிகளுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும். 

ஒரு நபருக்கு முதல் டோஸாக எந்த வகை தடுப்பூசி  வழங்கப்பட்டதோ, அதே  தடுப்பூசியையே இரண்டாம் டோஸாகவும் வழங்கிட வேண்டும். மாற்றி வழங்கிடக் கூடாது.  முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் ,தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு  அறிவித்துள்ள போதிலும் , பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். ஏனெனில் இப்பொழுது,கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும் பொழுதே, மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசியை  வழங்குவதும் மூன்றாம் கட்ட பரிசோதனை போன்றதுதான். எனவே,covaxin phase 3 பரிசோதனை களுக்கு உள்ளாகும் தன்னார்வளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணம் போன்று தற்பொழுது தடுப்பூசியை போட்டுக் கொள்வோர் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

click me!