
தமிழகத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்கள் இருவரும் மாறி,மாறி மோடியை சந்தித்து தாங்கள் அவரின் அடிமைகள் என்பதை நிரூபித்து வருகிறார்கள் என திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன் கிண்டல் அடித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, துரைமுருகன், தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை என்றார். வைகை அணையில் தெர்மகோல் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜுவால் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம், தற்போதைய முதல்வர் இபிஎஸ்ம் போட்டி போட்டுக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வருகிறார்கள். மோடி என்ன சொன்னாலும் செய்ய இவர்கள் இருவரும் தயாராக இருப்பதைப் பார்த்தால் தமிழகத்திலிருந்து மோடிக்கு வாய்த்த இரண்டு அடிமைகள்தான் , ஓபிஎஸ், இபிஎஸ் என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைந்து போகும் என்று ஆரூடம் தெரிவித்த துரை முருகன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.