சசிகலா தரப்பு என்னை குறுக்கு விசாரணைக்கு அழைக்கவில்லை: ஜெ.தீபா புகார்

First Published Jun 4, 2018, 11:17 AM IST
Highlights
The trial of Jayalalitha death is discriminatory - J. Deepa


ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம், முழுமையாகவோ, உண்மையாகவோ நடக்க வேண்டுமென்றால், ஆறுமுகசாமி ஆணையத்தில், தன்னை குறுக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. மறைந்த ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணையின் போக்கு, சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட போயஸ் கார்டன் பணியாளர்களுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக சசிகலா தரப்பு தன்னை அழைக்காதது ஏன்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜெ.தீபா, ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆறுமுகசாமி ஆணையத்தைப் பொறுத்தவரை, தற்போது அதன் விசாரணையின் திசைகளைப் பார்க்கும்போது, விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டார். சசிகலா அப்படிக் கேட்டிருக்கும்போது, ஆணையத்திடம் அபிடவிட் தாக்கல் செய்த அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அப்படியிருக்க, என்னை மட்டும் அவர்கள் இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை. எனவே, இதில் இருந்து சசிகலா தரப்பினர் பின்வாங்குகிறார்களா? அல்லது எதையாவது மறைக்கப் பார்க்கிறார்களா? என்ற கேள்வியை ஆறுமுகசாமி கமிஷனில் எழுப்ப நான் விரும்புகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

மறுபுறம், இந்த விசாரணை ஒருதலைப்பட்சமாக, முழுமையாக சசிகலாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், அவரால் நியமிக்கப்பட்ட போயஸ்கார்டன் பணியாளர்களுக்கும் சாதகமான ஒரு சூழ்நிலையில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது, இந்தக் கமிஷனையும், அ.தி.மு.க. அரசையும் நம்பி வந்த மக்களையும், ஆணையத்தால் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அ.தி.மு.க-வில், ஜெயலலிதாவுக்காக உயிரிழந்த தொண்டர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விசாரணை முழுமையாகவோ, உண்மையாகவோ நடக்க வேண்டுமென்றால், ஆணையத்தில் என்னை அவர்கள் குறுக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும். அதில் என்னுடைய கருத்துகளை நான் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த ஆடியோ பதிவில் ஜெ.தீபா கூறியுள்ளார்.

click me!