
மக்கள் பிரச்சனையில் தமிழக அரசு இன்னும் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், புதிய ஆளுநருக்கு வாழ்த்து சொல்லும்போது எதிர்கட்சிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்திருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்து உள்ளது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றார். டெங்குவைவிட போலி மருத்துவர்களின் சிகிச்சை அபாயகரமானது என்று கூறினார்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் டெங்கு காய்ச்சலை கொண்டு வர வேண்டும். தனியார் மருத்துவமனையில் நடைபெறும் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளபோது மாநில அரசு அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சசிகலா, தனது கணவரின் உடல்நிலை பார்க்கவே வந்துள்ளார். அரசாங்கம் கொடுத்த சலுகையை அவர் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கெயில் குழாயால் எந்தவித பாதிப்பும் வராது என்றும் இது குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் என்றார். அதையும் மீறி மக்கள் அச்சப்பட்டால், அது குறித்து மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும் தமிழிசை கூறினார். தமிழக அரசு, மக்கள் பிரச்சனையில் இன்னும் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.
புதிய ஆளுநருக்கு வாழ்த்து சொல்லும்போது எதிர்கட்சிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்திருக்க வேண்டும். மரபை மீறி இருக்கக்கூடாது என்பது எனது கருத்து. இதனை அதிகாரிகள் தெரிந்து செய்கிறார்களா? தெரியாது செய்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.