ரூ4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு! கபில் சிபல் ஆஜராக இபிஎஸ் எதிர்ப்பு-உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

By Ajmal KhanFirst Published Sep 18, 2023, 2:34 PM IST
Highlights

டெண்டர் முறைகேடு வழக்கில் தி.மு.க கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராவதாகவும், இதனை ஏற்க முடியாது என இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு

அதிமுக ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு  ரூ.713.34 கோடியாக உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டதாகவும், இதே போல தனது உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் வழங்கியதாகவும் திமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு திமுக சார்பாக 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி வழக்கை விசாரித்த சென்ன உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது என தெரிவிக்கப்பட்டது. 

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி

மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.  அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கடந்த ஜூலை 18-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வழக்கு  நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜர் ஆனார். அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பாக வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு

ஏற்கனவே இதே வழக்கில் தி.மு.க கட்சி சார்பில் வழக்கறிஞராக ஆஜரானவர் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார் இதனை ஏற்க முடியாது என எதிர்த்தனர். அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக முழு  விவரங்கள் எங்களுக்கு தெரியாது. எனவே இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு பட்டியலிடுவதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். 


 

click me!