கோயில் அங்கேயேதான் இருக்கும்.. சாமியும் அங்கேதான் இருப்பார்.. ஸ்டாலின் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்.!

By Asianet TamilFirst Published Oct 11, 2021, 8:39 AM IST
Highlights

கொரோனா பரவலைத் தடுக்க, தமிழகத்தில் கோயில்கள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியான அணுகுமுறையே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா ட் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. கோயில்களை திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ‘தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள் எல்லா நாட்களிலும் திறந்துள்ள நிலையில் கோயிலையும் எல்லா நாட்களும் திறக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜகவினர் கோயில் முன்னால் போராட்டம் கூட நடத்தினர்.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், “கோயில்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. எனவேதான், கொரோனா பரவலைத் தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயில் அங்கேயேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். கொரோனா தொற்று குறைந்த பிறகு வழிபாடுகளை நடத்திக்கொள்ளலாம். ஒருவேளை திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சியாகி விட்டது, கோட்பாட்டின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே உண்மையான எதிர்க்கட்சி” என்று சீமான் தெரிவித்தார்.
 

click me!