கோயில் பணத்தை எடுத்து கோயில் நிலத்தை தவிர வேறு எந்த இடத்திலும் கல்லூரி கட்ட கூடாது. அர்ஜூன் சம்பத் அடாவடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 5:40 PM IST
Highlights

அதேபோல், புழக்கத்தில் இல்லாத கோயில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்வது, இந்து கோயில்களில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரி அமைப்பது போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கோயில் பணத்தை எடுத்து கோயில் நிலத்தை தவிர வேறு எந்த இடத்திலும் கல்லூரியையோ, பள்ளிக் கூடங்களையோ கட்டக்கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  கோரிக்கை வைத்துள்ளார். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, தமிழில் கோவில் பெயர்கள் என அடுத்தடுத்த திட்டங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புழக்கத்தில் இல்லாத கோயில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்வது, இந்து கோயில்களில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரி அமைப்பது போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசு  இந்து சமய அறநிலையத்துறை மூலமாக எடுத்துவரும் பல நடவடிக்கைகளை பாஜக, இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அந்த வகையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் அக்காட்சியில் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர மாநில அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்,  உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசி அர்ஜுன் சம்பத், கோயில் நகைகளை உருக்க அரசியல்வாதிகளுக்கு அதிகாரமில்லை, அறங்காவலருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்றார். கோயில் பணத்தை எடுத்து திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த இடங்களில் கல்லூரி மற்றும் கல்லூரிகள் கட்டக்கூடாது என்று வலியுறுத்திய அவர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மட்டுமே கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் கட்ட வேண்டும் என்றார்.
 

click me!