தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்திற்கு அபராதம்
தமிழகத்தில் ஏசி, ஹீட்டர் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட இருப்பதை ஆரம்ப நிலையிலேயே கை விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது!
அபராதம் விதிக்க திட்டம்
வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 கிலோவாட்டாக இருந்து, அதைவிட அதிகமாக 7 கிலோவாட் அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். இரு மாத மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு தண்டமாக பெறப்படும். ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் தண்டம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல்கொள்ளைக்கு இணையானது! குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் தண்டலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கும் கூடுதலாக தண்டம் விதிப்பது நியாயமற்றது. ஏற்கனவே ரூ.12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் மின் கட்டண உயர்வு
வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக தண்டம் விதித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது! மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. எனவே, அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழக அமைச்சரவையில் மாற்றமா..? புதிதாக நியமிக்கப்பட உள்ள இரண்டு அமைச்சர்கள் யார் தெரியுமா..??