
அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரத்தெட்டு அருவாள் எதற்கு? என்று ஊர்ப்பக்கம் உரசலாய் கேட்பார்கள். கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இன்று கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கிறது என்று விமர்சன தேள்கள் கொட்டித்தள்ளுகின்றன தமிழக காங்கிரஸை.
சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாதியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை கோயமுத்தூரில் நடத்தியிருக்கிறது தமிழக காங்கிரஸ். அதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை அழைத்திருந்தனர். அவரை மேடையின் நடு நாயகமாக உட்கார வைத்துவிட்டு கிருஷ்ணசாமி, தங்கபாலு என மாஜி மாநில தலைவர்களும், தமிழக சட்டசபை காங் தலைவரான ராமசாமியும், சிட்டிங் மாநில தலைவர் திருநாவுக்கரசரும் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
வார்த்தைக்கு வார்த்தை தளபதி, தளபதி! என்று தி.மு.க.வினரை விட படு மோசமாக அவரை ஐஸ் வைத்தனர்.
“தலைதாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை நிமிர வைக்க உங்களை விட்டால் ஆளில்லை. உங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைய வேண்டும். நீங்கள் முதல்வராக வந்தமர வேண்டும். அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு கொடுக்கும்.” என்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாகவே கேட்டுவிட்டனர்.
தங்கபாலு, கிருஷ்ணசாமிதான் இப்படியென்றால் ஸ்டாலினின் எதிரி நண்பனாக பார்க்கப்பட்ட திருநாவுக்கரசரும் இதையே வழிமொழிந்தது அடடா ஆச்சரியம். ’டெல்லியில் ராகுலும், இங்கே நீங்களும் அரியணையில் அமர்ந்தால்தான் வகுப்புவாத சக்திகளின் ஆட்டம் அடங்கும்.’ என்று இதற்கு ஒரு சித்தாந்த சாயமும் பூசி காலில் விழுந்திருக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் இந்த ‘ஸ்டாலினோபோபியா’ சீனியர் கதர்களுக்கு கலக்கத்தை தந்துள்ளது. ஒரு தேசத்தையே வழிநடத்திய இரும்புப் பெண்மணியாம் இந்திராகாந்தியின் நூற்றாண்டு மேடையில் நின்று கொண்டு இப்படி ஒற்றை மாநிலத்தில் வெற்றி வேண்டும், பிழைப்பு நடத்திட வேண்டும் என்பதற்காக ஸ்டாலினின் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சியிருப்பது இந்திராகாந்தியை அசிங்கப்படுத்தி இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள்.
ஸ்டாலின் என்பவர் யார்? அன்னை இந்திராவால் எமெர்ஜின்ஸியில் சிறையில் போட்டு பிழிந்தெடுக்கப்பட்டவர். அந்த ஸ்டாலினிடம் நீங்கள் கெஞ்சிக் கொண்டிருப்பதும், காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எனும் பிரகடனத்தை மறந்தே போனது அசிங்கம்! ஒரு பெரும் கட்சியுடன் கூட்டணி சேர விரும்புவதும், அந்த கூட்டணியில் தாம் இருப்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் பேசுவதும் தவறில்லை. ஆனால் தன்னம்பிக்கை இழந்து, தன்மானத்தை மறந்து ’ஸ்டாலினே சரணாகதி. உங்களை விட்டால் ஆளில்லை. காப்பாற்றுங்கள் எங்களை’ என்று குப்புற சாந்திருப்பதுதான் அவலம், பேரவலம் என்று தலையிலடிக்கிறார்கள்.