
முன்னாள் அமைச்சர் ஏன் இப்படி தலைமறைவாக இருக்கிறார்? வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவது தானே முறை என்று கேட்டால் அதற்கு அதிமுகவினர் சிலர் , “ராஜேந்திரபாலாஜிக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. அவர் தினந்தோறும் மாத்திரை சாப்பிட்டு வருகிறவர். அதனால் சிறைக்குச் சென்றால் உடல் நிலை மோசமாகிவிடும் என்று பயப்படுகிறார். ஜெயலலிதா உடல்நிலையே சிறைக்கு சென்று வந்தபின்னர் தான் மிக மோசமானது
உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட உடனேயே தனது வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் விருதுநகரில் இருந்து டிசம்பர் 17 மதியம் 2 மணியளவில் புறப்பட்டுவிட்டார். சமீபகாலமாக தான் வைத்திருக்கும் ஆண்டிராய்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வீட்டிலேயே போட்டுவிட்டு, பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படும் பட்டன் டைப் போன் ஒன்றில் புதிய சிம் கார்டு போட்டுக் கொண்டுதான் அவர் கிளம்பியிருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், “விருதுநகரில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து செங்கோட்டை, புளியரை சென்று திருவனந்தபுரம் போகும் ரூட்டில் போயிருக்கிறது ராஜேந்திரபாலாஜியின் வாகனம். அந்த ரூட்டில் ஒரு ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில்தான் இப்போது சிகிச்சையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி” என்றும் கூறப்பட்டது. அடுத்து தனது உதவியாளர்களுடன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதற்கடுத்து டெல்லியில் பதுங்கி இருப்பதாக கூறபட்டது. திருப்பத்தூரில் முடங்கி இருக்கிறார் என தனிப்படை போலீஸார் விரைந்தனர்.
இதனை அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி கார் விட்டு கார் தாவி மறைந்து வருகிறார். ஆனால் எப்படியும் ஓரிரு தினங்களில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து விடுவோம் என்கிறது போலீஸ்.
போலீஸ் தேடுவதையும், அதற்கு முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஓடுவதையும் பார்த்து பேசாமல் சரண்டர் ஆகி விடலாம் என சொல்லாத அரசியல்வாதிகள் இல்லை. ஆனால் அவரது இந்த ஓட்டத்திற்கு காரணமே மிரட்டும் வகையில் அவருக்கு கிடைத்த தகவல் தானாம். அதாவது பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் பொறுப்பேற்ற உடனேயே அந்த வட்டாரத்தில் நடக்கும் தகவல்களை தனக்கு மிகவும் நெருக்கமான சோர்ஸ் மூலம் அவ்வப்போது விசாரித்து வந்தாராம் ராஜேந்திர பாலாஜி. அதில் மாதவரம் மற்றும் மதுரையில் நடந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து தோண்டுவது தெரிந்து அவர் அப்போதே சுதாரித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் திடீரென அரசு வேலைவாய்ப்பு மோசடியில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடன் தனது சோர்ஸை அவர் தொடர்பு கொண்டுள்ளார். ’’இந்த வழக்கு எல்லாம் சும்மா தான். அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் கைவசம் இருக்கு. பாத்து கவனமா நடந்துக்கோங்க’ என சிக்னல் கொடுத்ததாகவும் அது தெரிந்து அவர் சிக்காமல் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்தாலும் அடுத்தடுத்து சிக்கல் இருப்பது உண்மை என்கிறது ஆவின் வட்டாரம்.