அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வந்த அதே பிரச்சனை தங்கமணிக்கும்...! நாளை முதல் வலுக்குமா போராட்டம்...?

First Published Feb 15, 2018, 6:44 PM IST
Highlights
The same problem that came to Vijayapaskar will be thangamani


தமிழ்நாடு மின் வாரியத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒப்பந்த நிர்ணயம் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் தொழிற் சங்க நிர்வாகிகளிடமும், உயர் அதிகாரிகளிடம் ஊழியர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். 

இதுத் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நிலுவை தொகை இல்லாமல் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின்வாரியம் முடிவு செய்தது. 

ஆனால், தமிழக அரசின் நிதித்துறை 2.40 மடங்கு ஊதிய உயர்வு மட்டுமே போதுமானது என்று மின்வாரியத்திடம் தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த மின் ஊழியர்கள் பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில்  மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது.  அதன் பின்பு, மூன்றாவது கட்டமாக, இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனால் நாளை குறிப்பிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 17 சங்கங்களில் ஐ.என்.டி.யூ.சி உள்பட 14 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 

பேச்சுவார்த்தை நடைபெறும்போதே ஒரு சில சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாகவும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர அன்போடு அழைக்கிறேன் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

நாளை வேலைநிறுத்தம் நடைபெற்றால் மின்தடை ஏற்படாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் மின்தடை ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை தெரிவித்தார். 

மின்வெட்டு குறித்து புகாரளித்தால் நிவர்த்தி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

click me!