
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா வாங்கிக் கட்டிய திட்டுக்களை விட அதிகமாக திட்டு வாங்கியவர் ஸ்டாலின் தான். ‘கருணாநிதி மட்டும் இயங்க கூடிய நிலையில் இருந்திருந்தால் இன்று ஆட்சி அரியணையில் தி.மு.க. அமர்ந்திருக்கும்.
ஆனால் ஸ்டாலின் தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவறவிட்டுவிட்டார்.” என்று போட்டுப் பொளந்து வருகின்றன விமர்சனங்கள்.
துவக்கத்தில் இவற்றை அலட்சியம் செய்து வந்த ஸ்டாலின் இப்போதெல்லாம் இந்த விமர்சனங்களை அதிக கவலையுடன் எடுத்துக் கொள்கிறார்.
இந்த விமர்சனங்களை நீர்த்துப் போக செய்யும் வகையில் தனது அதிரடிகள் இருக்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்திருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் “இன்னும் இரண்டு மாதங்கள்தான் இந்த ஆட்சி.
அதிகபட்சம், ஏப்ரல் மாதத்திற்குள் ஆட்சியை கவித்துவிட வேண்டும். எப்படியும் ஒரு மாதத்திற்குள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்துவிடும்.
இது நமக்கு சாதகமாகவே இருக்கும். இதை வைத்து ஆட்சியைக் கலைத்து விடலாம். ஆகவே, தேர்தலுக்கு தயாராக இருங்கள். அதற்கு முன்பாக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகைதில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.” என்று சொன்னாராம்.
சிம்பிளாக சொல்வதானால் ‘எடப்பாடி அரசுக்கு ஏப்ரல் வரை கெடு’ என்பதே ஸ்டாலினின் திட்டம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்நிலையில் கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதனோடே சட்டமன்ற தேர்தலும் வந்துவிடும் என்றே பொதுவாக கணிக்கப்படுகிறது.