பிரதமர் மோடியை குழந்தைகள் கேலி செய்த ரியாலிட்டி ஷோ... அது கருத்து சுதந்திரமே கிடையாது... அண்ணாமலை தடாலடி.!

By Asianet TamilFirst Published Jan 17, 2022, 11:04 PM IST
Highlights

வ.உ.சி., வேலுநாச்சியார் போன்ற  தலைவர்கள் சர்வதேச அளவில் தெரியாத தலைவர்கள் என அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல்.

குழந்தைகள் வாயிலாக அரசியல் கருத்துக்கள் வெளியிடுவது தவறு, குழந்தைகளுக்கு வசனங்களை எழுதி கொடுத்து ரியாலிட்டி ஷோவில் பேச வைத்திருப்பது தவறு என்று தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக சார்பில் தமிழகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரைக்கு பிரதமர் மோடி வர விரும்பினார். 10008 பானைகளில் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒமைக்ரான் தொற்று காரணமாகவும், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் அவரால் வர இயலவில்லை.” என்று அண்ணாமலை தெரிவித்தார். அவரிடம் திமுக சார்பில் திருவள்ளுவர் காவி உடை அணிந்த போஸ்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “திமுக நண்பர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான இந்து வாழ்வியல் முறைப்படி திருவள்ளுவர் வாழ்வியலை நடத்தியவர். திமுகதான் அவரை வைத்து மத அரசியல் செய்கிறது.” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுவது அரசின் கருத்து அல்ல. குடியரசு விழா அணிவகுப்பு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படுகிறது. 6 மாதங்களுக்கு முன்பே குழு அமைத்து, ஆலோசனைகள் செய்து, ஒவ்வொரு வருடமும் அதற்கான கரு பொருள் வழங்கப்படும். கேரளா மாநிலம்கூட விளக்கம் கொடுத்துள்ளது. நாராயண குரு, ஆதிசங்கராச்சாரியார் இடம் பெற வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கேரளா அரசு ஒப்புக்கொள்ளவில்லை.  

வ.உ.சி., வேலுநாச்சியார் போன்ற  தலைவர்கள் சர்வதேச அளவில் தெரியாத தலைவர்கள் என அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். தமிழக அரசின் வாகன பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டியிருக்கிறது. பொதுவாக எல்லா மாநிலத்துக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நிச்சயமாக இதுதொடர்பாக முழு விபரம் அறிந்து விளக்கம் அளிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. 2011-ஆம் ஆண்டில் என்.சி.பி.சி.ஆர் என்ற குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு ரியாலிட்டி ஷோ தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வாயிலாக அரசியல் கருத்துக்கள் வெளியிடுவது தவறு, குழந்தைகளுக்கு வசனங்களை எழுதி கொடுத்து ரியாலிட்டி ஷோவில் பேச வைத்திருப்பது தவறு.

 

இது மிகவும் கண்டனத்துக்குரியது. கருத்து இருந்தால்தான் சுதந்திரம். இதில் கருத்து சுதந்திரமே கிடையாது. சட்டப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் என்சிபிசிஆர்-க்கு எதிரானது. எனவேதான், பொது மன்னிப்பு கோர வலியுறுத்துகிறோம். அதன்பிறகு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் மேகதாது அணை விவகாரத்தில் நான் பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்னை கடுமையாக விமர்சிக்கிறார்கள். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசு இதுவரை எதுவுமே பேசவில்லை. தமிழர்களின் உரிமையை பாஜக அரசு எப்போதும் விட்டுக் கொடுக்காது” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

click me!