
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக, இடை தரகர் சுகேஷ் சந்திரா டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசில் கைதனார்.
இவர்கள் இருவரிடமும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, வழக்கறிஞர் குமார், உதவியாளர் ஜனார்த்தனன் உள்பட சிலரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதைதொடர்ந்து நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட டிடிவி.தினகரனை, சென்னை ராஜாஜி பவனில் தங்க வைத்து விசாரிக்கின்றனர். மேலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஹவாலா பண பரிவர்த்தனை செய்யும் முக்கிய ஏஜென்ட்டுகள் இருப்பாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் போலீசார், டிடிவி.தினகரனை விஜயவாடாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை, இன்று காலை தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பியபோது, அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மற்றொரு ஏஜென்ட்டும் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சென்னை ஆலந்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை அதிகாரி மோகன் என்பவர், ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்ததும், போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.