“இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்” வைகோ காட்டம்...

Asianet News Tamil  
Published : Mar 30, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
“இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்” வைகோ காட்டம்...

சுருக்கம்

The protest is the solution vaiko statements

நரேந்திர மோடி அரசு தமிழக மக்களுக்கு ஒருகாலும் காவிரி பிரச்சினையில் நீதி வழங்காது என்பது திட்டவட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது. இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள் என வைகோ காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அளித்தத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்பதையும், நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டம் (Scheme) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டினேன்.

ஆறு வார காலத்திற்குள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருப்பதும் கண்துடைப்பே. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவது இல்லை என்று நான் கூறியதுதான் நடந்திருக்கின்றது.அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதுதான்.

தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரைத் திறக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், நடுவர் மன்றம் வழங்கிய நீர் பங்கீட்டில் 14.75 டி.எம்.சி. நீரை கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, மத்திய பா.ஜ.க. அரசு தனது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத பச்சைத் துரோகத்தைச் செய்தது.

உச்சநீதிமன்றம் 2016 இல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கெடு விதித்தபோது, இவ்வாறு உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. நடுவர் மன்றம் தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மோடி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கலாமா? என்று விவாதிக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.தமிழக அரசின் கவைக்கு உதவாத இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் பயன் அளிக்கப்போவது இல்லை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் காவிரிப் பிரச்சினையை விசாரிக்கும் வழக்காக ஆக்குவது ஒன்றுதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழி ஏற்படும். தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, அனைத்து வகையிலும பேரழிவை நோக்கித் தள்ளி வரும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்துக் கிடப்பதால்தான் டில்லி பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது.

தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அனைத்துக் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் புது டில்லியில் நேரடியாகச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் ஏழரைக் கோடி தமிழக மக்களின் ஒருமனதான தீர்மானம் ஆகும்.

தமிழக முதலமைச்சர் இதற்கான பிரதமர் சந்திப்பை உறுதி செய்ய எவ்வளவோ முயன்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நியாயமான கோரிக்கையை உதாசீனம் செய்து தமிழக மக்களை அவமானப்படுத்தினார்.

நரேந்திர மோடி அரசு தமிழக மக்களுக்கு ஒருகாலும் காவிரி பிரச்சினையில் நீதி வழங்காது என்பது திட்டவட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது. இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.

காவிரியில் தமிழ்நாட்டின் மரபு உரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டு போராட்டக் களத்தை அமைப்பது மட்டுமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!