திருடுவதும் போலீஸ்.. அதை கண்டுபிடிப்பதும் போலீஸ்... என்னடா கேவலம் இது.. அந்த ஆண்டவனுக்கு கூட இது அடுக்காது.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 2:20 PM IST
Highlights

சென்னையில் நகை கடை ஒன்றில் புகுந்து ரூ. 5 லட்சம் பணம் திருடிய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் ஏராளமான நகை கடைகள் உள்ளன.  

சென்னையில் நகை கடை ஒன்றில் புகுந்து ரூ. 5 லட்சம் பணம் திருடிய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. இதில் ஆர்த்தி என்ற நகை கடையை, கடந்த மாதம் 26-ம் தேதி இரவு ஊரடங்கின் போது திறந்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்து பூக்கடை காவல் நிலைய ரோந்து காவலர்களான சஜின், முஜிப் ரஹ்மான் ஆகிய இருவரும் சென்றனர். கடையின் ஷட்டர் பாதி திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்ததில் கடையின் உரிமையாளர் நாராயணன், ஊழியர் ஒருவர் என கட்டுக் கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தனர். பணம் குறித்து விசாரித்த காவலர்கள் பணத்திற்கான ஆவணங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிவிட்டு சென்றனர். 

காவலர்கள் இருவரும் சென்ற பின் கடை ஊழியர் பணத்தை மீண்டும் எண்ணி பார்த்தார். அப்போது ரூ.50 லட்சத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த போது, உடனடியாக உதவி ஆய்வாளர் ஒருவர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கடை ஊழியர்களிடம் கேட்ட போது காலையிலிருந்து யாரும் கடைக்கு வரவில்லை எனவும், காவலர்கள் மட்டுமே வந்ததாகவும் மேலும் அவர்கள் பணப்பையை ஆராய்ந்ததாகவும் கூறி காவலர்கள் மட்டுமே பணத்தை எடுத்திருக்க வேண்டும் என ஊழியர்கள் கூறினர்.

அதன் பின்பு பூக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் முஜிப் ரஹ்மான் மற்றும் சுஜின் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். ஆனால், இரண்டு காவலர்களும் தாங்கள் பணம் எடுக்கவில்லை எனக்கூறினர். இதனால் காவலர்கள் எடுக்கவில்லை எனக்கூறி விசாரணையை முடித்தனர். இந்த நிலையில் கடையின் உரிமையாளர் நாராயணன்  உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவிடம் புகார் தெரிவித்தார். உதவி ஆணையர் நகை கடைக்கு வந்து விசாரணை நடத்தி, சாலையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளார். சிசிடிவி காட்சிகளில் காவலர் சுஜின் நகைக்கடையிலிருந்து வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை காட்டி காவலர்களிடம் விசாரணை செய்தபோது காவலர்கள் சுஜின் மற்றும் முஜிப் ரஹ்மான் ரூ.5 லட்சம் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். 

பின்னர் காவலர்கள் திருடிய பணத்தை கடையில் கொடுத்து சமாதானமாகியுள்ளனர். மேலும் பணம் திருடிய காவலர்களை காப்பாற்றுவதற்காக இந்த விவகாரத்தை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் பூக்கடை காவல் நிலையத்தோடு முடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூக்கடை காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு போலீசாரின் மூலமாக இந்த விவகாரம் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் துரைக்குமாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை திருடிய காவலர்கள் சுஜின் மற்றும் முஜிப் ரஹ்மான் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ஆனால் திருடிய இரண்டு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு எதுவும் செய்யாமல் பணி இடை நீக்கம் மட்டுமே செய்திருப்பது தற்போது சர்ச்சையாகி வருகிறது.


 

click me!