
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உடல் நலக்குறைவால், கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.
இவர், விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். அமைச்சரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அன்று விருதுநகரில் மேற்கு மாவட்டம் சார்பில் திமுக அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ராஜேந்திரபாலாஜி அதன் பின் தலைமைறைவாகி
ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட போலீசாரின் தனிப்படைகள் தேடி வரும் நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். இதற்கிடையே அன்று இரவே ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்களான ரமணன், வசந்தகுமார் மற்றும் ராஜேந்திரபாலாஜியின் டிரைவர் ஆகியோரை திருத்தங்கல் போலீஸார் கூட்டிச் சென்று விசாரித்தனர்.
ராஜேந்திரபாலாஜிக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் அவரது சகோதரி மகன்கள்தான். அதனால் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் ராஜேந்திரபாலாஜிக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில அதிமுகவினரிடமும் காவல்துறையினர் ரகசியமாக விசாரித்திருக்கின்றனர். அவர் குறித்து சில முக்கிய தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஏன் இப்படி தலைமறைவாக இருக்கிறார்? வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவது தானே முறை என்று கேட்டால் அதற்கு அதிமுகவினர் சிலர் , “ராஜேந்திரபாலாஜிக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. அவர் தினந்தோறும் மாத்திரை சாப்பிட்டு வருகிறவர். அதனால் சிறைக்குச் சென்றால் உடல் நிலை மோசமாகிவிடும் என்று பயப்படுகிறார். ஜெயலலிதா உடல்நிலையே சிறைக்கு சென்று வந்தபின்னர் தான் மிக மோசமானது
உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட உடனேயே தனது வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் விருதுநகரில் இருந்து டிசம்பர் 17 மதியம் 2 மணியளவில் புறப்பட்டுவிட்டார். சமீபகாலமாக தான் வைத்திருக்கும் ஆண்டிராய்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வீட்டிலேயே போட்டுவிட்டு, பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படும் பட்டன் டைப் போன் ஒன்றில் புதிய சிம் கார்டு போட்டுக் கொண்டுதான் அவர் கிளம்பியிருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், “விருதுநகரில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து செங்கோட்டை, புளியரை சென்று திருவனந்தபுரம் போகும் ரூட்டில் போயிருக்கிறது ராஜேந்திரபாலாஜியின் வாகனம். அந்த ரூட்டில் ஒரு ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில்தான் இப்போது சிகிச்சையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி” என்றும் கூறப்பட்டது. ஆனால் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர்களுடன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் தற்போது தனிப்படை போலீஸார் நேற்று முன் தினம் பெங்களூருவுக்கு விரைந்தனர்.
இதனை அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி கார் விட்டு கார் தாவி மறைந்து வருகிறார். ஆனால் எப்படியும் ஓரிரு தினங்களில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து விடுவோம் என்கிறது போலீஸ்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘என் இருப்பிடம் குறித்து அறிய என் உறவினர்களை இரவு நேரங்களில் தனிப்படை போலீசார் தொந்தரவு செய்கின்றனர். அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே, என் முன் ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என மனு தாக்கல் செய்தார்.