தமிழக அமைச்சராக ஆகியிருக்க வேண்டியவர்... தற்காலிக சபாநாயகரானார்...!

By Asianet TamilFirst Published May 8, 2021, 9:20 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையின்  தற்காலிக சபாநாயகராக கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். 
 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்நிலையில், மே 11 அன்று சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். மே 12 அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட  கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக மே 10 அன்று ஆளுநர் முன்னிலையில் பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள உள்ளார். தற்காலிக சபாநாயகர் பதவி வழக்கமாக மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கு.பிச்சாண்டி சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் 1989, 1996, 2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், திருவண்ணாமலை மற்றும் கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப்பேரவைக்கு கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996-2001 கருணாநிதி அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
இந்த முறை கு.பிச்சாண்டி அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2006-ஐ தொடர்ந்து தற்போதும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எ.வ.வேலுவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், கு.பிச்சாண்டியால் அமைச்சராக முடியவில்லை. இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தலை அவர்தான் நடத்துவார் என்பதால், அந்தப் பதவியும் பிச்சாண்டிக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  

click me!