
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை காசிமேட்டில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி முதல் அமைச்சர்கள் வரை அங்கு கூடாரமிட்டு பணத்தை வாரியிறைப்பதாகவும் காவல்துறையினரும் ஆளுங்கட்சி பக்கம் நிற்பதாகவும், தேர்தல் ஆணைய அலுவலரும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.