ஊசிபோட்ட வலியே தெரியல.. புதுச்சேரி செவிலியரை பாராட்டிய பிரதமர் மோடி.. நம்பமுடியாத மகிழ்ச்சியில் நர்ஸ் நிவேதா.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2021, 12:02 PM IST
Highlights

தடுப்பூசி செலுத்திய தங்களை பிரதமர் மோடி, தனக்கு ஊசி செலுத்தினீர்கள் ஆனால் அதற்கான வலியே தெரியவில்லை அந்த அளவிற்கு மென்மையாக தடுப்பூசி செலுத்தினார்கள் என்று பிரதமர் தங்களை பாராட்டியதாக நிவேதா கூறியுள்ளார்.
 

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கவே பிரதமர் இன்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார் எனவும், பிரதமர் மோடிக்கு தடுப்புசி செலுத்திய  புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றுமுதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தடுப்புசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஆனாலும் சிலர் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அச்சம் இருந்து வருகிறது. அதேபோல் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் செவிலியர்கள் கேரளாவை சேர்ந்த ரோசமா அனில் , புதுவையை சேர்ந்த நிவேதா ஆகியோர் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டனர். 

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்த  கோவேக்ஸின் தடுப்பூசி முதல் டோசை அவர் இன்று போட்டுக் கொண்டார். பின்னர் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா நோயில்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று அவர் புகழாரம் சூட்டினார்.  பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பு செலுத்திய புதுச்சேரி செவிலியர் நிவேதா பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அவர், சுமார் மூன்று ஆண்டுகளாக டெல்லி எய்ம்ஸ்சில் பணிபுரிந்து வருகிறேன், இன்று இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் வருகிறார் என காலையில்தான் செய்தி அறிந்தேன். தடுப்பூசி மையத்தில் எனக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது. 

அதிலும் குறிப்பாக நான்தான் பிரதமருக்கு தடுப்பூசி போடவேண்டும் என அழைக்கப்பட்டேன், பிரதமர் ஐயா அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பெறுவதில் உள்ள தயக்கத்தை நீக்குவதற்காக பிரதமர் மோடி பாரத் பயோடெக்கின் இணை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கை தடுப்பூசியை அச்சமின்றி பொதுமக்கள் போட்டுக் கொள்ள ஊக்குவிக்கவும். பிரதமர் 28 நாட்களில் இரண்டாவது டோஸ்  எடுத்துக்கொள்வார் எனக் கூறிய நிவேதா,  தடுப்பூசி செலுத்திய தங்களை பிரதமர் மோடி, தனக்கு ஊசி செலுத்தினீர்கள் ஆனால் அதற்கான வலியே தெரியவில்லை அந்த அளவிற்கு மென்மையாக தடுப்பூசி செலுத்தினார்கள் என்று பிரதமர் தங்களை பாராட்டியதாக நிவேதா கூறியுள்ளார்...
 

click me!