
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசவே நேரம் கொடுப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்களின் பேரம் குறித்து அக்கட்சியின் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான சரவணன் பேசிய வீடியோ வெளிவந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்றும் ஆனால் அதில் வரும் வாய்ஸ் என்னுடையது அல்ல என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் சரவணனின் வீடியோ குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் சபாநாயகர் தனபால் அதை பற்றி பேச மறுப்பு தெரிவித்தார்.
இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றபட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்தும், கூட்டனி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி மற்றும் ஏனைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு திருநாவுகரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொகுதி பிரச்சனைகளை பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலுவாக எடுத்துரைப்பார்கள் எனவும், சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசவே நேரம் கொடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.