எடப்பாடிக்கு பதவி போச்சுன்னா நானா அடுத்த முதல்வர்?: பிரசன்னம் முதல் பச்சை கிளி ஜோசியம் வரை அலையாய் அலையும் அமைச்சர்கள்!

First Published May 6, 2018, 2:51 PM IST
Highlights
The minister Desire over the post of Chief Minister


இந்த ஸ்பெஷல் கட்டுரையை ஜெயலலிதாவிடமிருந்தே துவங்குவோம்! 2011 தேர்தலில் ஜெயலலிதா அமோகமாக ஜெயித்து அட்டகாசமாக முதல்வராக இருந்தார். வழக்கம்போல் தன் மந்திரி சபையை வைத்து தினம் தினம் ஒன் - டே மேட்ச் ஆடிக் கொண்டிருந்தார் அம்மா. எந்த விக்கெட் எப்படி போகும், யார் டக் அவுட் ஆவார்கள்? யார் சிங்கிள் ரன்னாவது எடுப்பார்கள்? என்றே தெரியாத நிலை. 

‘இந்த அமைச்சர் இந்த வாரத்துல பதவி இழக்கிறார். பந்தயம் பத்தாயிரம்! அந்த அமைச்சர் அடுத்த மாசம் மாஜி ஆகிறார் பெட் ஒரு லட்சம்’ என்று தமிழ்நாடு முழுக்க தாறுமாறாக சூதாட்டமே நடக்குமளவுக்கு சூழல் செம்ம ஹாட்டாக போய்க் கொண்டிருந்தது. 
அமைச்சர்கள் உச்சந்தலையில் துவங்கி உள்ளங்கால் வரை தங்கள் உடல் அணுக்களை கூட அம்மாவின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொண்டு, பம்மி பதுங்கி  தங்கள் துறையின் சந்து பொந்தில் சாய்வாக உட்கார்ந்து காலத்தை கடத்திக் கொண்டிருந்தனர். நமது எம்.ஜி.ஆரில் ஒரு கண், ஜெயா நியூஸில் மறு கண் என்று எங்கே ’விடுவிக்கப்பட்டார்’ லிஸ்டில் தங்கள் பெயர் வந்துவிடுமோ? என்று நொடிக்கு நொடி பதற்றத்திலேயே பணம் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை சேர்ந்த மந்திரி ஒருவரின் பதவி பட்டென பிடுங்கப்பட்டது. வெளியே தெரிந்துவிட்ட ஊழல், மிரட்டல், பெண் விவகாரம், நில அபகரிப்பு, தி.மு.க.வுடன் உள் குத்து...என்று எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால்  அவருக்கு ஏன் பியூஸ் போச்சு? என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்துதான் சக அமைச்சர்களுக்கே தெரியவந்தது அந்த விவகாரம். கேட்ட மாத்திரத்தில் சிலையாகி போனார்கள்! அப்புறம் தெளிந்து ‘ஆனாலும் அந்தாளுக்கு இவ்வளவு அதப்பு ஆகாதுய்யா! என்னா தெனாவெட்டிருந்தால் இப்படியொரு சிக்கல்ல சிக்குவார்.’ என்று ஆளாளுக்கு அங்கலாய்த்தனர்.

 அந்த மந்திரிக்கு பதவி போகுமளவுக்கு நடந்த வில்லங்கம் என்ன தெரியுமா? சொந்த தொகுதியில் ஒரு குக்கிராமத்திலிருக்கும் அவரது பாரம்பரிய வீட்டுக்கு மந்திரி சென்றிருக்கிறார். இரவு சாப்பாடு முடிந்து கதை பேசிக் கொண்டிருக்கையில், தனது பெரியம்மா முறையாகும் மிக வயதான பெண்ணிடம் கையை நீட்டி ஜோஸியம் கேட்டிருக்கிறார். அந்த லேடி தன் குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்து ஆட்களுக்கு மட்டும் கை ரேகை ஜோஸியம் பார்க்கும் பழக்கமுடையவர். 

கை ரேகைகளை அந்த லேடி கவனித்துக் கொண்டிருக்கையில் ‘நான் திடுதிப்புன்னு யோகமடிச்சு மந்திரியாகிட்டேன். அதே மாதிரி முதல்வராகவும் ஆக யோகமிருக்குதான்னு பாருங்க ஆத்தா?’ என்று இவர் கேட்க குடும்பமே கலகலப்பாக சிரித்திருக்கிறது. இதுதான் அவர் மீதான குற்றம். ஆக தனது நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள்ளேயே உளவாளியை அம்மா நியமித்து கண்காணித்த விஷயம் அப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறது. 
இதன் பிறகு எந்த அமைச்சரும் தன் மனைவியிடம் கூட அரசியல் பேச பயந்தனர். இதுதான் ஜெயலலிதா! இதனால்தான் அவர் மத்திய அரசே பயந்த ‘அம்மா’!
ஆனால் இன்றோ நிலைமையே தலைகீழ்! அதே ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த அமைச்சருக்கும் தலைமை மீது பயமில்லை. கமிஷனில் துவங்கி எல்லாவற்றிலும் அவரவர்கள் நானே ராஜா! நானே மந்திரி! என்று திரிகிறார்கள் என்று வெளிப்படையாகவே புலம்புகிறது முதல்வரின் வட்டாரம். 
ஜெயலலிதாவை பார்த்து அவரது அமைச்சர்கள் அன்று பயந்ததற்கு காரணம் அவரது முதல்வர் பதவியல்ல. ஜெ., ஒரு கவுன்சிலராக இல்லாவிட்டாலும் கூட அ.தி.மு.க. அமைச்சர்கள் அவர் முன்னாடி நிற்பதற்கு கூட நடுநடுங்குவார்கள். ஆனால் எடப்பாடியார் மீது இவர்கள் ஏதோ ஒரு மரியாதை வைத்திருக்க ஒரே காரணம் அவரது முதல்வர் பதவி மட்டும் தான். 

ஒரு விஷயம் தெரியுமா? இப்போது அமைச்சர்களாக இருக்கும் பலருக்கு அந்த முதல்வர் பதவி மீது தீராத ஆசை இருக்கிறது. ஏதோ ஒரு  எசகுபிசகான சூழலில் எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் தங்களுக்கும் முதல்வர் யோகம் வாய்க்கலாம்! என்பது பலரது நம்பிக்கை. 
அதிலும் தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், அதன் பின் பல குழப்ப நிலைகள் அரசில் வரும், அதன் ஊடே நிறைய ஏற்ற இறக்கங்கள், அணி தாவல்கள், பழிவாங்கல்கள், பதவியை விட்டு இறக்கப்படும் செயல்கள் நிகழும். அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு அளிக்க சம்மதிக்கும் தினகரன், எடப்பாடியார் மற்றும் பன்னீர்செல்வம் இரண்டு பேரும் முதல்வர் பதவியில் இருந்து இறங்கிட வேண்டும் என்று நிபந்தனை வைப்பார். ஆக இதன் முடிவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகளுக்கு பிரச்னை வந்து காலியிடம் ஏற்படும். அப்போது தங்களுக்கு அப்படியொரு வாய்ப்பு வந்துவிடாதா?என்றும், தினகரன் ஒரு வேளை முதல்வரானால் அமைச்சர் பதவிகள் கிடைக்குமா? துணை முதல்வர் பதவி கிடைக்குமா? என்றும் அமைச்சர்கள் மட்டுமல்ல தினகரன் அணியின் எம்.எல்.ஏ.க்களும் கூட்டிக் கழித்து கணக்கு போட்டுக் கொண்டே இருக்கின்றனர். 
இதை ஒட்டி அரசியல் செய்தால் மட்டும் போதாது என்று எண்ணுபவர்கள், தங்களின் ஜாதகம் மற்றும் கைரேகைகள் சொல்லும் பலன் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதிதால்தா கன்னாபின்னாவென துடிக்கின்றனர். 

’எனக்கு முதல்வர் ராசி இருக்குதா?’ என்கிற கேள்வியுடன் கேரளாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்களை சந்திப்பது மட்டுமல்லாது லோக்கலில் தங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் சந்தையில் கிளி ஜோஸியம் பார்க்கும் நபர்கள் வரை எல்லோரையும் போட்டுப் பிறாண்டி வருகிறார்கள். இதோடு மட்டுமில்லாமல் ஜோஸியர்கள் கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் பாவ பரிகாரங்களையும், அதிர்ஷ்டத்தை டாப் அப் செய்யும் செயலையும் லட்சங்களைக் கொட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். 
இன்னும் இவர்கள் போகாதது பொருட்காட்சியில் ‘எந்திரன்’ படத்து சிட்டி போல் நிற்கும் கம்ப்யூட்டர் ஜாதகம் சொல்லும் ரோபோவிடம் மட்டும் தான். 
எல்லாம் பதவி படுத்தும் பாடு!
 

click me!