
சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடக்கம்
தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறி கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பட்ஜெட்டை புறக்கணித்தனர். இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தில் தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக எதிர்கட்சி கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதனையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதம் முடிவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.இந்தநிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரச்சனையை எழுப்ப எதிர்கட்சி திட்டம்
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் இதனை தொடர்ந்து நடைபெறும் நேரம் இல்லா நேரத்தில் சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க, பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாளை நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் விவாதம் நடத்த உள்ளனர். இறுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கவுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டமானது அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற்றாலும் 22 நாட்கள் அலுவலானது நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததும் அமைச்சர்கள் புதிய அறிவிப்பை வெளியிடுவார்கள், இதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுவார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் காரசாரமாக நடைபெற்றாலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.