தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருவதாக தெரிவித்தவர், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 27 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் அடம்பிடித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிபறிக்கும் வகையில் மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. இதை கண்டித்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் மாபெரும் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ மாநாட்டை சென்னையில் நடத்துவது என்றும்,
அடம்பிடிக்கும் ஆளுநர்
இந்த மாநாட்டிற்கு கேரள மாநிலத்தின் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைப்பது என்றும் சிபிஐ(எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. ஒன்றிய மோடி அரசு மாநில உரிமைகளின் மீது கொடூரமானத் தாக்குதலை தொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறை மீதான மாநிலங்களின் உரிமைகளை முற்றாக பறிக்கிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 27 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் அடம்பிடித்து வருகிறார்.
ஆர்எஸ்எஸ் முகவராக ஆளுநர்
ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகவர்கள் போலவே செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில அரசினால் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் படிக்க மறுத்தது அப்பட்டமான அத்துமீறலாகும். மொழிவழி மாநிலங்கள் என்பதையே ஏற்காத பாஜக பரிவாரம் மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே சிதைக்க முயல்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒன்றியத்தின் அதிகார குவிப்பை நிகழ்த்தி வருகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுகவுக்கு நெருக்கடி.. ஆளுநரை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை..! அதிர்ச்சியில் ஸ்டாலின்