இரட்டை தலைமையால் அதிமுக அழிவை சந்திக்கும்.. கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி.. அதிர்ச்சியில் இபிஎஸ்

By vinoth kumarFirst Published Jul 18, 2021, 9:55 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் அதிகளவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ஓ.பன்னீர்செல்வம் சரியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர் என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்  தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில், திமுக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாராட்டு தெரிவிப்பது, மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஜான்பாண்டியன்;- அதிமுகவுடன் தமமுக உறவு நீடிக்கிறது, ஆனால் கூட்டணி இல்லை. தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அதிமுக- பாஜக கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர். பழனிசாமி, பன்னீர்செல்வமும் எனக்கு துரோகம் செய்துவிட்டனர்.

தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால்தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தென் மாவட்டத்தில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுகவில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் அதிகளவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ஓ.பன்னீர்செல்வம் சரியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

click me!