வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தமிழகம் வராதாம்.. முதல்வர் எடப்பாடி சொல்லும் விளக்கம் இதுதான்.!!

By T BalamurukanFirst Published May 31, 2020, 10:17 AM IST
Highlights

வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.

தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. விவசாயிகள் அச்சம்கொள்ள வேண்டாம்.இருந்தபோதிலும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. 


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"தற்போது வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவை கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஊட்டி போன்ற மாவட்டங்களில் அவை காணப்படுவதாக தகவல் வந்ததும் வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வயநாடு ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான ஊட்டி காந்தள் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரம், நெர்லகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவை பாலைவன வெட்டுக்கிளி வகையைச் சார்ந்தவை அல்ல என்றும், உள்ளூர் வகையானவை என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.ஆப்ரிக்கா நாடுகளில் சிஸ்டோசெர்கா கிரிகேரியா என்ற பாலைவன வெட்டுக்கிளிகள் நடப்பாண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளைக் கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் பெருங்கூட்டமாக படையெடுத்து வந்து சுமார் 33 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு காணப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் (எல்.டபுள்யூ.ஓ.) மூலம் மாநிலங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 29-ந் தேதி வெளியான மத்திய அரசின் அறிக்கையின்படி, ஜூலை வரை இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும் என்றும் பீகார், ஒடிசா வரை அவை பரவினாலும், தென்னிந்திய பகுதிகளில் பரவ வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. விவசாயிகள் அச்சம்கொள்ள வேண்டாம். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, அவற்றின் நகர்வை மத்திய மற்றும் பக்கத்து மாநில வேளாண் துறைகளுடன் சேர்ந்து கண்காணிக்க வேண்டும்.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களை ஒட்டியுள்ள பக்கத்து மாநில பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்கம் உள்ளதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டரின் தலைமையில் வேளாண்மை, தோட்டக்கலை, தீயணைப்பு துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

 

click me!