சசிகலா பிரமாண பத்திரம் தொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தகவல் தவறானது! ஆறுமுகசாமி ஆணையம் மறுப்பு!

First Published Mar 21, 2018, 6:33 PM IST
Highlights
The information published by the English daily is incorrect


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலா தாக்கல் செய்ததாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தகவல் தவறானது என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது.  கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் அண்மையில் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ள ஆணையம், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்படாவிட்டால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இந்த நிலையில், சசிகலா தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியானது தவறான தகவல் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மறுத்துள்ளது. ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் 70 சதவீத செய்தி தவறாக உள்ளது என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து  அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி குறிப்பாக வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது.

click me!