மொத்தமாக ஜெயலலிதாவாகவே மாறிய ஸ்டாலின்.. காவல் துறையை தட்டி தூக்கிய தந்திரம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2021, 2:37 PM IST
Highlights

இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த காவல்துறையையும்  மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. 

இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த காவல்துறையையும்  மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையை கண்டு கொள்ள மாட்டார்கள், போலீசுக்கு உரிய மரியாதை இருக்காது என்ற ஒரு பிம்பம் இருந்து வந்த நிலையில் முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு அதை அடித்து நொறுக்கி உள்ளது. 

திமுக ஆசிரியர்களின் ஆட்சி என்றும்.. அதிமுக காவலர்களின் ஆட்சி என்றும் வரையறுக்கப்படாத ஒரு பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்து மறைந்த கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலம் தொட்டு  இந்த பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் ஆசிரியர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுவதும், காவல் துறை என்று வந்தால், அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்றும், அவர்களின் கைகள் கட்டப்படும் என்ற ஒரு தோற்றமும் இருந்து வருகிறது. 

அதேபோல் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறிவிடும், தமிழகத்தில் உள்ள பிற அரசு ஊழியர்களை காட்டிலும் காவல்துறைக்கு தனி மரியாதை தரப்படும், போலீஸ் சொல்வதுதான் சட்டம்,  சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் காவல் துறைக்குதான் செல்வி ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் தருவார் என்ற பிம்பமும் இருந்து வந்தது. அதற்கேற்ப காவல் துறையை நவீனமயமாக்குவதிலும், காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தார் என்பதனையும் யாரும் மறுக்கவும் முடியாது. அதேவேளையில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது முதல் வாத்தியார்- போலீஸ் ஆதரவு அரசியல்  தமிழகத்தில் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனம் . மொத்தத்தில் முக்கிய துறைகாளான கற்பித்தல், காத்தல் என்ற  இரண்டு துறைகளையும், இரு தலைவர்களும் தங்களுக்கு சாதகமான துறைகளாக கையில் வைத்திருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம் என்றே சொல்லலாம். 

ஆனால் இவ்விரண்டு தலைவர்களும் மறைந்துவிட்ட நிலையிலும் அந்த பிம்பம் எடப்பாடி ஆட்சிவரை நீடித்ததை பார்க்க முடிந்தது. தேர்தலுக்கு பின்னர் அத்தனை  காட்சிகளும் கோலங்களும் மெல்ல மாறத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறி உள்ள நிலையில், அவரின் நடவடிக்கைகள் சாதுர்யம் மிக்கதாக இருந்துவருகிறது. ராஜதந்திரத்தில் கருணாநிதியை போலவும், ஆளுமையில் செல்வி ஜெயலலிதாவை போலவும் அவர் செயல்படுகிறார் என அதிமுகவினரே சட்டமன்றத்தில் அவரை பாராட்டியதை அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் ஜெ தன் கையில் வைத்திருந்த காவல்  துறையையும் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கியுள்ளார் என்பது கண்கூடு, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, முதலமைச்சர் ஸ்டாலின்  காவல்துறைக்கான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அந்த அறிவிப்புகள் இருந்தன. 

காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்படி 800 ரூபாயில் இருந்து1000 ரூபாய் வரை உயர்த்தியது முதல் பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன. காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்புவரை காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாக தங்களமு குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும், வாரம் 1 நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அப்போது அறிவிப்பு செய்தார். மற்ற துறைகளைக் காட்டிலும் போலீஸ் துறையில் உள்ளவர்களே அதிக பணிச்சுமைக்கு ஆளாகிறோம், எங்களுக்கு நல்ல நாள் என்ற ஒன்று கிடையாது, அனைத்து பண்டிகை நாட்களிலும் மற்ற முக்கிய நாட்களில் அனைவரும் விடுமுறை எடுத்தாலும் எங்களுக்கு மட்டும் பணி இருக்கும் காவலர்கள் புலம்பி வந்த நிலையில், அவர்களின் நீண்டநாள் மனக்குறையை களையும் வகையில் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்கள் குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும், வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 

இந்த அறிவிப்பு காவல்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் முதலமைச்சரின் மீது அபிமானத்தையும் உருவாக்கியது. இந்நிலையில் காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் இன்று வெளியாக உள்ளது. முதல் அமைச்சரின் இந்த உத்தரவு காவலர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் மன மகிழுச்சியையும் உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சியாக இருந்தும் அதிகாரத்தில் இருப்பது அதிமுக போலீஸ்தான் தன் கூட்டணி கட்சிகளே திமுகவை இடித்துரைத்து வந்த நிலையில், ஒற்றை அறிவிப்பில் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் புது நம்பிக்கை பாய்ச்சியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த அதிரடி உத்தரவின் மூலம் இது வாத்திகள் ஆட்சி மட்டும் இல்ல போலீஸ் ஆட்சியும்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். 
 

click me!