
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், உரைகள் என எல்லாவற்றிலும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை குறித்து பாஜக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பிய போது, ‘ஒன்றிய அரசு’ என அழைப்பதில் தவறில்லை. அவ்வாறே தொடர்ந்து அழைப்போம்’ என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என இரண்டு வார்த்தைகளே உள்ளன. அதனால், ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை இடம்பெறாதது பற்றி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அப்படி இருக்க இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் “மனுதாரர் கோருவதுபோல முதல்வர், அமைச்சர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.