2023-ஆம் ஆண்டில் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கக்கூட தமிழக அரசிடம் பணம் இருக்காது.. பகீர் கிளப்பும் அண்ணாமலை!

By Asianet TamilFirst Published Nov 19, 2021, 9:49 PM IST
Highlights

தமிழக அரசின் கடன் சுமை என்பது 5.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டு தமிழக அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது.

வருகிற 2023-ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்கக்கூட அரசிடம் பணமே இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவி அனிதா பால்துரைக்கு, தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாராட்டு விழா நடந்தது.  அதில் அவர் கவுரவிக்கப்பட்டார்.  இந்த நிகழ்ச்சியில், அனிதா கார் வாங்குவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அண்ணாமலை கூறினார்.

சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதன் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் குறைந்தது. அதை பின்பற்றி பாஜக ஆளும் மாநில அரசுகளும் மற்ற மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி தெரிவித்தும்கூட, பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்காமல் இருக்கிறது.

இதன்மூலம் தமிழக மக்களை முட்டகளாக்கி, ஏமாற்றி, திமுக ஆட்சிக்கு வந்திருப்பது உண்மையாகி விட்டது.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலையை பற்றியெல்லாம் பேச எந்த அருகதையும் கிடையாது. அவர்தான் விலை உயரவே காரணம்.  தமிழக அரசுக்கு எவ்வளவு கடன் சுமை இருக்கிறது என்பது தெரிந்துதான், திமுக தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அளித்தது. தற்போது, தமிழக அரசின் கடன் சுமை என்பது 5.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டு தமிழக அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது.

ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், அந்த மாநிலம் 25 சதவீதம்தான் கடன் வாங்க முடியும். அந்த அளவை அடுத்த ஆண்டு தமிழ் நாடு அரசு எட்டிவிடும். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றால், வருகிற 2023-ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்கக்கூட அரசிடம் பணமே இருக்காது” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

click me!