வேளாண் சட்டங்கள் மட்டும் போதுமா..? அந்தச் சட்டத்தையும் வாபஸ் வாங்குங்க.. பரபரக்கும் திமுக கூட்டணி கட்சி.!

By Asianet TamilFirst Published Nov 19, 2021, 8:03 PM IST
Highlights

நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பையும் குமுறலையும் ஏற்படுத்தி அப்பாவிகள் பலர் உயிர் இழக்கவும், அப்பிராணிகள் பலர் காராகிரகத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்படியாகவும் தூண்டிய மத்திய அரசின் சி.ஏ.ஏ. - இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டியதாகும்.
 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்டத் திருத்தத்தோடு சி.ஏ.ஏ. சட்டத்தையும் திரும்பப் பெறும் சட்டத்தையும் இணைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விவசாயிகள் ஓராண்டு காலமாகக் கடுமையாக எதிர்த்து வந்த மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான முடிவை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவை அறிவித்து, வரும் நவம்பர் 29 முதல் தொடர உள்ள இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்ற அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவு இந்திய மக்களின் வரவேற்புக்குரியது. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் மூன்று ஆண்டு காலத்திற்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யாது என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இந்த உறுதியை 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அனைத்தும் ஏற்கவில்லை. மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக இருந்து ஓராண்டு காலமாகப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்;

பல இழப்புகளைச் சந்தித்து இருக்கிறார்கள்; பல உயிர் பலிகளையும் தந்திருக்கிறார்கள். அவர்களின் உறுதிமிக்க தொடர் போராட்டத்திற்குரிய வெற்றியாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் பாராட்டுக்குரியவர் ஆவார். இதேபோல் நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பையும் குமுறலையும் ஏற்படுத்தி அப்பாவிகள் பலர் உயிர் இழக்கவும், அப்பிராணிகள் பலர் காராகிரகத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்படியாகவும் தூண்டிய மத்திய அரசின் சி.ஏ.ஏ. - இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டியதாகும்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் நல்லெண்ணப் பார்வை செலுத்தி பிரதமர், சி.ஏ.ஏ. சட்டத்தைத் திரும்பப் பெறுவதிலும் அந்தக் கண்ணோட்டத்துடன் தனது அணுகுமுறையைத் தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்டத் திருத்தத்தோடு சி.ஏ.ஏ. சட்டத்தையும் திரும்பப் பெறும் சட்டத்தையும் இணைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நாட்டு மக்களின் வரவேற்பையும், வாழ்த்தையும் பிரதமர் பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்” என்று அறிக்கையில் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
 

click me!