அடுத்த ரெய்டுக்கு தயாராகிறதா லஞ்ச ஒழிப்பு துறை.? நீதிமன்றத்தில் சொன்ன பரபரப்பு தகவல்.! யார் அந்த அதிமுக மாஜி?

By Asianet TamilFirst Published Nov 19, 2021, 7:45 PM IST
Highlights

தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் நிலங்கள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அவருடைய பினாமி பெயர்களில் சொத்துகள் உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 600 கோடி வரை சொத்து சேர்த்த புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம் மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தன்னுடைய பதவி காலத்தில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பணிகளுக்கான டெண்டர்களை தன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த டெண்டர்கள் வழங்கியதில் டெண்டர் வெளிப்படை சட்டத்தின் கீழ் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை.

மேலும் தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் நிலங்கள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அவருடைய பினாமி பெயர்களில் சொத்துகள் உள்ளன. கடந்த 2006-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துக்களின் மதிப்பு 53.56 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால், 2011 தேர்தலில் 26.81 கோடி ரூபாய் என்று அன்பழகன் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்தல் ஆணைய படிவத்தில் சொத்துக்கள் விவரங்களையும் மறைத்து உள்ளார்.

எனவே, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குப் பதிவு கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அவர் வாதிடுகையில், “இந்தப் புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. அதற்கான ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால் கால அவகாசம் வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் என மாஜி அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப் பாயுமா என்பது இனி வரும் காலத்தில் தெரிந்துவிடும்.  

tags
click me!