
செலவின பார்வையாளர்களின் தேவைக்கேற்ப பறக்கும் படையினர் அதிகரிக்கப்படுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சி முதல் தேர்தல் ஆணையம் வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், செலவின பார்வையாளர்களின் தேவைக்கேற்ப பறக்கும் படையினர் அதிகரிக்கப்படுவார்கள் என்றார். நத்தம் தொகுதி தொடர்பாக புகார்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல் கொரோனா காலக்கட்டத்தில் நடத்தப்பட்டதால் அவர்களின் ஆலோசனை கேட்டுள்ளோம் என்ற அவர் அதை பின்பற்றி தமிழகத்திலும் தேர்தல் நடத்தப்படும் என்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 800 என்ற அளவில் தான் உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
தினந்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை அளித்துள்ளது எனவும் கூறினார். அதற்கேற்றார் போல் சுகாதாரத்துறை செயல்பட வேண்டும் என்ற அவர் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பணப்பட்டுவாடா தொடர்பாக பிடிக்கப்படும் போது உரிய ஆவணங்களை காண்பித்தால் விடுவிக்கப்படும் என கூறினார்.