என் எண்ணம், என் சிந்தனை, என் உழைப்பு, என் ஓட்டம், என் முயற்சி, அனைத்துமே எத்தனை விரைவில் முடியுமோ… அத்தனை விரைவில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தவிர வேறு எதுவும் இல்லை.
தமிழகத்தில் இனி வருங்காலம் தாமரைக் காலம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘ஒரே நாடு’ என்ற பாஜகவின் கட்சிப் பத்திரிகையில் ‘உங்கள் அண்ணா’ என்ற பெயரில் எழுதியுள்ளவற்றை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலை பதிவு செய்துள்ளார். அதில், “கணக்கில்லா இடர்பாடுகளையும் சவால்களையும் சந்தித்த 2021 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த பல நல்ல நிகழ்வுகளையும் சவால்களையும் அசைபோட்டு பார்க்கிறேன். கொடிய நோய் தொற்றுக்கு கொரோனாவின் உச்சம்... தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்... பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மாற்றம்... அதில் எனக்கு வழங்கப்பட்ட ஒரு அரிய வாய்ப்பு என்று என் சிந்தனை ஓட்டங்கள் சிறகடித்துப் பறந்தன.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தொண்டனாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து என் எண்ணம், என் சிந்தனை, என் உழைப்பு, என் ஓட்டம், என் முயற்சி, அனைத்துமே எத்தனை விரைவில் முடியுமோ… அத்தனை விரைவில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தவிர வேறு எதுவும் இல்லை... அன்பான சொந்தங்களே அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலே இதுவரை கடந்து வந்த பாதைகளையும், இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடைமுறைகளையும், இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளையும், பல கோணங்களில் கள்ளக்குறிச்சியில் அலசி ஆராய்ந்தோம். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தொகுத்துத் தந்த ஆலோசனைகளுடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
ஆகவே இனி வரும் நாட்களில் கட்சியில் வழங்கப்படும் பொறுப்பு என்பது முகவரி-அட்டையிலோ, கடிதப்-பட்டையிலோ, மட்டும் போட்டுக்கொள்ளும் அலங்கார பொறுப்பாக இல்லாமல், அடுத்த கட்டத்திற்கு நம் கட்சியையும் நம் சித்தாந்தங்களையும் நம் கொள்கைகளையும் நம் இலக்குகளையும் எடுத்துச்செல்லும் உறக்கமில்லா உழைப்பைக் கொடுக்கக்கூடிய பொறுப்புகளாக அமையும்... அப்படி அமைய வேண்டும்... அப்படிப்பட்டவர்கள் அமைய வேண்டும்... என்ற ஆவல் மிகுந்து இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இதில் மிகவும் இன்றியமையாதது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் நம் முயற்சியும் உயர்ச்சியும் உங்கள் பங்களிப்பாக இருக்க வேண்டும். வாருங்கள் கை கோர்ப்போம்... வருங்காலம் தாமரைக் காலம்....” என்று அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளார்.