கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை காலி பண்ண காங்கிரஸ்.. ஆடிப்போன பாஜக.. துளிர்க்கும் நம்பிக்கையில் காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Jan 2, 2022, 9:10 PM IST
Highlights

கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது.

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், அதன் தாக்கம் அடுத்த ஆண்டு அந்த  மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

கர்நாடகாவில் பதவிகாலம் முடிந்த 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 1,185 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதேபோல 57 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 1,185 வார்டுகளில் 498 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இத்தேர்தலில் தனிபெறும் கட்சியாக காங்கிரஸ் காங்கிரஸ் உருவெடுத்தது. ஆளுங்கட்சியான பாஜக 437 வார்டுகளை கைப்பற்றியது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42.06 சதவீத வாக்குகளையும், பாஜக 36.90 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இதேபோல 34 பேரூராட்சிகளில் 386 வாட்டுகளில் காங்கிரஸ் வென்றது. பேரூராட்சிலும் பாஜக இரண்டாம் இடத்தையே பிடித்தது. 19 நகர சபைகள் தேர்தலிலும் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சியே பிடித்தது. குறிப்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான சிக்காவியில் உள்ள பங்காபுரா பேரூராட்சியின் 23 வார்டுகளில் 14 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பாஜக வெறும் 7 வார்டுகளில் மட்டுமே வென்றது. கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது.

2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் ராஜினாமா செய்ததால், அந்த ஆட்சி கவிழ்ந்தது. பின்னர்,  பாஜக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் அதை நம்பும் மக்களின் செல்வாக்கை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இது தொடரும்” என்று கூறியுள்ளார்.

click me!