
கட்சித் தாவல் தடை சட்டத்தின் எந்த பிரிவும் பொருந்தாத ஒரு செயலுக்காக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதிருப்பது ஜனநாயகப் படுகொலை எனவும் இது கண்டிக்கதக்கது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் தலைமைக் கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுத்திருப்பது தகுதி நீக்கத்திற்கான இந்த அடிப்படையே தவறு என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்குள் கொறடா ஆணையை மீறி செயல்படும் பட்சத்தில் தான், சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும் எனவும் கொறடா உத்தரவை 18 உறுப்பினர்களும் மீறாத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சி முடிவு செய்தது எனவும் அந்த முயற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், இப்போது அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து தங்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள ஆளுங்கட்சி துடிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஆளுனரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.