
’தனி கட்சி துவங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்!’ என்று கமல்ஹாசன் பற்ற வைத்திருக்கும் பட்டாசு அ.தி.மு.க.வை விட அதிகம் பாதித்திருப்பது ரஜினியின் கூடாரத்தைத்தான். இந்த திடீர் ட்விஸ்டை எதிர்பார்க்காத தமிழருவி மணியன் தவிக்க துவங்கியிருக்கிறார்.
வைகோவை தமிழக முதல்வராக்குவேன், விஜயகாந்தே ஆக சிறந்த தலைவராக முடியும்...என்றெல்லாம் முழங்கிவிட்டு சமீப காலமாய் ரஜினிகாந்தின் பிரசார பீரங்கியாகி இருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன். சமீபத்தில் திருச்சியில் ரஜினி ரசிகர்களின் ஏற்பாட்டின் பேரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி ‘ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி!’ என்று முழங்கினார். நல்ல சிந்தனையாளர்! என்று தன் மீது தமிழகம் வைத்திருந்த மரியாதையில் சில கிலோக்களை இப்படி ரஜினிக்கு சாமரம் வீசுவதன் மூலம் குறைத்துக் கொண்ட தமிழருவிக்கு தன் பங்குக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.
ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராக நேரடியாகவும், பா.ஜ.க.வின் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சற்றே மறைவாகவும் கருத்து உரசல்களை நடத்திக் கொண்டிருக்கும் கமல் அரசியலுக்கு வருவார் என்று பேச்சு எழுந்தது. இது அரசியல் அரிதாரம் பூச எத்தனிக்கும் ரஜினி வட்டாரத்தை கவலை கொள்ள வைத்தது. ‘எனக்கு அரசியல் எண்ணம் இல்லை.’ என்று கமல் துவக்கத்தில் விலகியபோது, அரசியல் வானில் ‘கடந்து செல்லும் மேகம்’ என்றுதான் ரஜினி வட்டாரம் எண்ணியது. தமிழருவியும் ரஜினியை சந்திக்கும் போது இதே கருத்தைத்தான் சொல்லியிருந்தார்.
ஆனால் தடாலடியாக கமல் இப்போது தனிக்கட்சி துவங்கும் சிந்தனையிலிருப்பதாக சொல்லியிருப்பது ரஜினியின் வட்டாரத்தை தலைசுற்ற வைத்திருக்கிறது. காரணம்?....அடர்த்தியான கதையமைப்பு மற்றும் செழுமையான நடிப்பு இருந்தாலும் கூட ரஜினிகாந்தின் ஜனரஞ்சக ஸ்டைல் படத்தின் முன்னால் தோற்றுப் போக இது ஒன்றும் கமலின் சினிமா அல்ல. தமிழர்களின் உணர்வு சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார் கமல்.
எனவே அவர் முன் என்னதான் பாயும் புலியாக ரஜினி வந்து நின்றாலும், அவர் முதுகிலிருப்பவை பா.ஜ.க. போட்ட வரிகளே என்றுதான் தமிழன் நினைப்பான். ஆக ரஜினியின் புலி கெத்தெல்லாம் அரசியலில் கமலுக்கு முன் செல்லாது என்பதை தமிழருவி மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்.
இந்த திடீர் திருப்பத்தை எதிர்பாராத தமிழருவி “ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அந்த மிகப்பெரிய நாளை அடைவதற்கான தருணங்கள் மகிழ்வுடன் எண்ணப்பட்டு வருகின்றன.
ரஜினி மற்றும் கமல் இருவரும் நற்சிந்தனை உடையவர்கள். இருவரும் தனித்தனி கட்சிகளை ஆரம்பித்தால் இங்கே கொடிகள் பெருகும். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புதான் உருவாகும்.
எனவே கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து அரசியல் புரிய வேண்டும்.” என்று குரல் கொடுத்திருக்கிறார்.
கமல் நிச்சயம் இந்த கோரிக்கையை ரசிக்க மாட்டார் என்பதே அவரை அறிந்தவர்களின் எண்ணம்.