
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை, ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கியுள்ளார். இதற்க்கு பவானி தேசியும் வீடியோ வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தமிழக முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் இருந்தே, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் வாள்வீச்சு கற்று வந்த பவானி தேவி, பல்வேறு கடுமையான நிலைகளை கடந்து தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் முதல் இந்திய வாள் வீச்சு வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார். ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுவதற்கான செலவுகளுக்கு பவானி தேவி கஷ்டப்பட்டாலும், 2015-ம் ஆண்டு முதல் பலதரப்பிலிருந்து உதவிகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. விளையாட்டு கூட்டமைப்பிற்கும் அரசு நிதியுதவி அளித்ததால், டோக்கியோ ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராக ஆரம்பித்தார்.
பல்வேறு கடுமையான பயிற்சிகளுக்கு பின் தன்னுடைய இலக்கை எட்டியுள்ள பவானி தேவி, ஒலிம்பிக் பயிற்சிக்காக இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இதுபோன்ற இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வரும் முதல்வர் முக.ஸ்டாலின், பவானி தேவியின் தாயாரை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன், செந்தில் பாலாஜி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அறிந்த பவானி தேவி, வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது... "அனைவருக்கும் வணக்கம் நான் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்கில் முதல் இந்தியராக தேர்வாகி இருக்கிறேன், அதற்கான சிறப்பு பயிற்சிக்காக இத்தாலியில் இருக்கிறேன். தற்போது மாண்பு மிக தமிழக முதலமைச்சர் எனக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். கண்டிப்பாக இந்த நிதி உதவி என்னுடைய பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்காக முதல்வருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும், அதே போல் நான் பணிபுரியும் மின்சார துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கண்டிப்பாக நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் முயற்சியோடு பயிற்சியை துவங்குவதாக கூறியுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.