தங்கமணி மீதான முறைகேடு புகார்.. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு.. பீதி கிளப்பும் செந்தில்பாலாஜி!

By Asianet TamilFirst Published Jun 20, 2021, 9:31 PM IST
Highlights
மின் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான முறைகேடு புகார்கள், அதன் முகாந்திரங்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பல பகுதிகளிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிமுக ஆட்சி இருந்தவரை மின்வெட்டே ஏற்படவில்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மின்வேட்டு ஏற்படுகிறது என்று அதிமுகவும் புகார் கூறிவருகிறது. அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் சரியாக நடைபெறாததால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். பராமரிப்பு பணிகள் சரியாக நடைபெற்றது என்றும் மே 2 வரை மின்வெட்டே ஏற்படவில்லை என்றும் முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி செந்தில்பாலாஜிக்கு பதிலடிக் கொடுத்திருந்தார். 
இந்நிலையில் செந்தில்பாலாஜி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மின் துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு 9498794987 என்ற எண்ணில் நுகர்வோர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மின் துறை சார்ந்த அனைத்து வகை புகாரினையும் இந்த சேவையில் தெரிவிக்கலாம். ஏற்கனவே 1912 என்ற பழைய எண்ணிற்கு வரும் அழைப்புகளும் இந்த எண்ணுக்கு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
மின்மிகை மாநிலம் என முன்னாள் அமைச்சர் கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், முறையாக 9 மாதங்கள் பராமரிப்பு பணிகள் ஏதும் செய்யவில்லை. அதன் காரணமாகவே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனை முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி ஒப்புக்கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகள் ஏன் நடைபெறவில்லை என அவர் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக மின்வாரியம் அதிக கடன் சுமையில் உள்ளது. அதைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான முறைகேடு புகார்கள், அதன் முகாந்திரங்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்.” என்று செந்தில்பாலாஜி  தெரிவித்துள்ளார்.

click me!