முதல்ல கொரோனா தடுப்பு சவால்... அப்புறம்தான் நீட் தேர்வு விவகாரம்... கனிமொழி கறார்...!

By Asianet Tamil  |  First Published May 11, 2021, 9:09 PM IST

கொரோனா நோய் சவால்களை எதிர்கொண்டு வென்ற பிறகுதான் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசை திமுக அரசு  வலியுறுத்தும் என்று தூத்துக்குடி திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
 


தூத்துக்குடியில் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். அமைச்சர்களும் அதிகாரிகளும் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி, தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், அதற்கு ஆகும் மருத்துவச் செலவை தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏற்கும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். கொரோனா நோயாளிகளின் விரிவான சிகிச்சைக்கும் தேவையான கூடுதல் படுக்கை வசதிகளையும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை தேவைப்பட்டால் திருமணம் மண்டபங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதுபோன்ற தேவை ஏற்படாதவண்ணம் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுடன் சேர்ந்து மக்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் அந்த நிலைமைக்கு போகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார். அவர்கள் ஓரிரு நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி, நோயை கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை எடுப்பார்கள். கொரோனா நோய் சவால்களை எதிர்கொண்டு வென்ற பிறகுதான் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும்” என்று கனிமொழி தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

click me!