
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபாவின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். வழக்குகள், சொத்துக்கள் போன்ற விவரஙகள் அடங்கிய படிவம் 26 ஐ நிரப்பாததால் ஜெ.தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது.
இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினமே வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டனர். இவர்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட பெரும்பாலோனோர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. அதனால் தற்போது கரு நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இதையடுத்து அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் என 135 பேர் இதுவரை வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
நேற்றுடன் முடிவடந்த வேட்புமனுத்தாக்கல் இன்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அவசர அவசரமாக வந்து டோக்கனை பெற்றார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆர்.கே.நகரில் போட்டியிட எந்த சின்னத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பயந்த மாதிரியே தற்போது ஜெ.தீபாவின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். வழக்குகள், சொத்துக்கள் போன்ற விவரஙகள் அடங்கிய படிவம் 26 ஐ நிரப்பாததால் ஜெ.தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.