
நடிகர் விஷால் இப்போது அரசியல் அவதாரம் எடுத்து, அரசியல்வாதி அரிதாரம் பூசியிருக்கிறார். அவரது அண்மைக் கால வேட்புமனுத் தாக்கலும், அதில் நடந்து கொண்ட விதமும் அதனை உறுதிப் படுத்தியிருக்கின்றது.
தில்லி முதல்வர் கேஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னார் விஷால். அவரின் பாதையைப் பின்பற்றித்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும் தெளிவாகக் கூறினார் விஷால். தான் மக்களின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறினாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அதில் அரசியல் இல்லாமலா இருக்கும்?
விஷாலின் ஆதரவாளர்கள் இப்போது ஒரு தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். விஷால் தனிக்கட்சி தொடங்கியா போட்டியிடுகிறார்? அவர் சுயேட்சையாகத்தானே போட்டியிடுகிறார். இதில் என்ன அரசியல் இருக்கிறது எனவே அவர் போட்டியிடுவது சரிதான் என்று கூறுகின்றனர்.
ஆனால், விஷால் போட்டியிடுவதால், நடிகர் சங்கத்துக்கும், குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெரும் பிரச்னை வரும் என்று கூறி போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் இயக்குனர் சேரன். அவர் நேற்று ஊடகங்களில் அளித்த பேட்டியில், விஷால், தனது தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடட்டும் என்றும், ஒரு முடிவு தெரியும் வரை தாம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறி, அவ்வாறே இருந்து வருகிறார்.
இந்நிலையில், அரசியலில் எத்தனையோ நடிகர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள், சங்கப் பொறுப்பில் இருப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று சிலர் விஷாலுக்கு ஆதரவாக கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜயகாந்த் தனிக்கட்சி துவங்கி ஆளுமை செலுத்தியிருந்தார். அவர் முன்னர் நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோதுதான் தேமுதிக கட்சியை துவக்கினார். அப்போது நடிகர் எஸ்.வி.சேகர், விஜயகாந்த்திடம் ஒரு கோரிக்கை வைத்தார். நடிகர் சங்கம் ஒரு அரசியல் சாராத அமைப்பு. நீங்கள் அரசியல் கட்சி தலைவராகிவிட்டீர்கள். எனவே நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
விஜயகாந்த்தும் அவர் சொன்னதன் உட்பொருளைப் புரிந்து கொண்டவாறே, சிரித்துக்கொண்டே அவரின் கருத்தை ஆமோதித்தார். அடுத்து, பெருந்தன்மையாக ராஜினாமாவும் செய்தார். ஆனால், விஜயகாந்த் கடைப்பிடித்த முன்மாதிரியை நடிகர் சரத்குமார் கடைபிடிக்கவில்லை. சரத்குமார், நடிகர் சங்கத் தலைவராகவும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவராகவும் தொடர்ந்தார்.
ஆனால், விஜயகாந்தோ தன் நற்குணத்தால், மக்கள் செல்வாக்கால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஆனால் சரத்குமாரோ ஒற்றை எம்.எல்.ஏ., பதவியை வைத்துக் கொண்டு கட்சியை நகர்த்திக் கொண்டிருந்தார்.
இப்போது விஷாலும் அத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். அவர் தனது அரசியலுக்கு வர முன்னோட்டமாக ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவர் இணைத்த சொத்துப் படிவங்கள் குளறுபடியாக உள்ளன என்று கூறப்படுகிறது. எனவே அவரது வேட்பு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா, அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில், விஷாலுக்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால், தன் அரசியல் வாழ்க்கையின் முன்மாதிரியாக விஜயகாந்தை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா அல்லது சரத்குமாரை முன்மாதிரியாகக் கொண்டு அரசியல், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் சவாரி செய்யப் போகிறாரா?
ஆனால் விஷாலோ, திடீரென அரவிந்த் கேஜ்ரிவாலை அல்லவா பின்பற்றப்போவதாகச் சொல்லியிருக்கிறார்...!